Sunday 29 May 2016

29th may current affairs in tamil



உலகம் :
1200 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் புதிய பூமி கண்டுபிடிப்பு
பூமியில் இருந்து சுமார் 1200 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் மனிதன் வாழ்வதற்கு ஏற்றதாகக் கருதப்படும் புதிய பூமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் கடந்த 2009-ம் ஆண்டில் கெப்ளர் என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அதிநவீன தொலைநோக்கி பொருத்தப்பட்ட இந்த விண்கலம் பூமியில் இருந்து 150 மில்லியன் கி.மீ. தொலைவில் சுற்றி வருகிறது. இதுவரை 2300-க்கும் மேற்பட்ட கிரகங்களை கெப்ளர் கண்டுபிடித்துள்ளது.
அந்த வரிசையில் பூமியில் இருந்து 1200 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் புதிய பூமியை கெப்ளர் கண்டறிந்துள்ளது. அந்த கிரகத்துக்கு கெப்ளர்-62எப் என்று நாசா விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இது பூமியை விட 1.4 மடங்கு பெரிதாக உள்ளது.

எஃப்-16 போர் விமானங்களை அமெரிக்காவிடமிருந்து வாங்குவதில் பாகிஸ்தான் தோல்வி

அமெரிக்காவிடமிருந்து 8 எஃப்-16 ரக போர் விமானங்களை வாங்கும் சுமார் 700 மில்லியன் டாலர்கள் ஒப்பந்தம் காலாவதியானதால், பாகிஸ்தானுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மே 24-ம் தேதிக்குள் பாகிஸ்தான் இந்த ஆயுதக் கொள்முதலுக்கான ‘ஏற்புக் கடிதம்’ அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த ஆவணம் அனுப்பப்படாததால் ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது.
இந்நிலையில்தான் கடந்த மாதம் பாகிஸ்தான் பிரதமரின் அயலுறவு ஆலோசகர் சர்தாஜ் அஜீஜ் அமெரிக்க போர் விமானம் இல்லையெனில் வேறு நாட்டிடமிருந்து பெற வேண்டியதுதான் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
இந்நிலையில் ரஷ்யா அல்லது சீனாவை பாகிஸ்தான் அணுகலாம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

என்.எஸ்.ஜி.-யில் இந்தியா: பாகிஸ்தான் எதிர்ப்பை புறக்கணித்தது அமெரிக்கா

அணு ஆயுதப் பரவல் தடுப்பு, அணுசக்தியை சமூக பயன்பாட்டில் ஈடுபடுத்துவது தொடர்பான அணு எரிப்பொருள் வழங்கும் நாடுகள் (நியூக்ளியர் சப்ளையர்ஸ் குரூப்) நாடுகளில் இந்தியாவை உறுப்பினராக அங்கீகரிக்க பாகிஸ்தான் தெரிவித்து வந்த எதிர்ப்பை அமெரிக்கா புறக்கணித்துள்ளது.
“இது அணு ஆயுதப் போட்டியைப் பற்றியதோ, அணு ஆயுதங்கள் பற்றியதோ அல்ல, மாறாக அமைதிக்கான வழிமுறையில் அணு ஆற்றலை சமூகப் பயன்பாட்டுக்கு முறைப்படுத்துவது தொடர்பான விஷயம், எனவே பாகிஸ்தான் இதனை புரிந்து கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அமெரிக்க அரசுத்துறையின் உதவி செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 

இந்தியா :

ஒரே ராக்கெட் மூலம் 22 செயற்கைக்கோள் ஏவ திட்டம்: இஸ்ரோ தலைவர் கிரண் குமார் தகவல்

வருகிற ஜூன் மாத இறுதியில் ஒரே முறையில் 22 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைக்க இருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (இஸ்ரோ) தலைவர் கிரண் குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நேற்று நடை பெற்ற கர்நாடக வர்த்தக மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (இஸ்ரோ) தலைவர் கிரண்குமார், விக்ரம் சாராபாய் ஏவுதள மையத்தின் இயக்குநர் சிவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இன்று பரேலி-மொரதாபாத் இடையே சொகுசு ரயில் சென்சார் சோதனை ஓட்டம்

ந்தியாவில் புல்லட் ரயில் கனவை நனவாக்குவதன் ஒரு பகுதியாக, ஸ்பானிஷ் டால்கோ ரயில் பெட்டிகளை சோதனை ஓட்டமாக வெற்றிகரமாக இந்திய ரயில்வே இயக்கிப் பார்த்துள்ளது.
இஸாட் நகர்-போஜிபுரா இடையே இந்த சோதனை ஓட்டம் நடந்துள்ளது. டால்கோ சொகுசு பெட்டிகளை இந்திய ரயில் இன்ஜின் இழுத்துச் சென்றது.
“இந்த சொகுசு பெட்டிகளை டால்கோ 30 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கியது. தஜிகிஸ்தான் உட்பட 12 நாடுகளில் வெற்றி கரமாக முயற்சித்துப் பார்க்கப் பட்டுள்ளது.
இந்த பெட்டிகளில் ஏராளமான சென்சார்கள் உள்ளன. இவை சரியாக இயங்குகின்றனவா என்பதை பரிசோதிக்க, ரயில்வே வாரியத்தின் மெக்கானிகல் இன்ஜினியர் சோதனை ஓட்டத்துக்கு உத்தரவிட்டார்” என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த பெட்டிகளின் வேகம் இன்று பரேலி-மொரதாபாத் இடையே பரிசோதித்துப் பார்க்கப்பட உள்ளது. வரும் ஜூன் 12 வரை சோதனை ஓட்டம் தொடரும். மணிக்கு 115 கி.மீ. வேகத்தில் இவை செல்லும்.
மதுரா-பல்வால் இடையே நடக்கும் சோதனை ஓட்டத்தில் மணிக்கு 180 கி.மீ, வேகத்தை இவை எட்டும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள னர்.
மேலும், புதுடெல்லி- மும்பை பாதையில் மணிக்கு 200 முதல் 220 கி.மீ. வேகத்தை எட்டும் என எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தமிழில் பிரதமர் அலுவலக இணைய சேவை தொடக்கம்

தமிழ், மலையாளம், தெலுங்கு, குஜராத்தி, வங்க மொழி, மராத்தி ஆகிய 6 பிராந்திய மொழிகளில் பிரதமர் அலுவலக இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களுடன் தகவல்களை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் பிரதமர் அலுவலக இணையதள சேவையை முக்கிய பிராந்திய மொழிகளிலும் வழங்க அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார். அதன்படி தமிழ், மலையாளம், தெலுங்கு, குஜராத்தி, வங்க மொழி, மராத்தி ஆகிய 6 பிராந்திய மொழிகளின் சேவை நேற்று தொடங்கப்பட்டது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் புதிய சேவைகளை தொடங்கிவைத்தார்.
இதற்கு முன்பு www.pmindia.gov.in என்ற பிரதமர் அலுவலக இணையதளத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தகவல்கள் இடம்பெற்றன. இனிமேல் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் பிரதமர் அலுவலக செய்திகளை அறிந்து கொள்ள முடியும்.
தமிழகம் :

இரண்டு நாட்களில் வெயிலின் தாக்கம் குறையும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், ''தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும். அதே சமயம் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.
வெப்பச் சலனம் காரணமாக வட தமிழக மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது'' என்றார்.
கடந்த 24 மணி நேரத்தில் தளியில் 10 செ.மீட்டர் மழையும், கிருஷ்ணகிரி, ஓசூரில் 5 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக வேலூர், திருத்தணியில் 41.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

கிரடிட், டெபிட் கார்டு மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு சேவை கட்டணம் ரத்து

கிரடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்வதற்கான சேவைக் கட்டணம் ஜூன் 1-ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கிட மத்திய ரயில்வே அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்ய ஏராளமான பயணிகள் கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி வருகின் றனர். இதற்கு சேவை கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பயணிகளின் நலனை கருத்தில்கொண்டு இந்த சேவை கட்டணத்தை ரத்து செய்ய ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி ஜூன் 1 முதல், சேவை கட்டணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இந்த புதிய சலுகையால் மக்கள் பயன்பெறுவதுடன், நிர்வாகத்தில் சில்லறை பிரச்சினையையும் தீர்க்க முடியும்.

விளையாட்டு :

ஐபிஎல் இறுதிப்போட்டியில் இன்று பெங்களூரு-ஐதராபாத் பலப்பரீட்சை: முதல்முறையாக சாம்பியன் பட்டம் வெல்வது யார்?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. பெங்களூரு சின்ன சாமி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியை இரவு 8 மணிக்கு சோனி இஎஸ்பின் சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
முதல் முறையாக கோப்பையை வெல்லும் கனவுடன் இரு அணிகளும் இன்றைய போட்டியை எதிர்கொள்கின்றன. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கோப்பையுடன் ரூ.20 கோடி பரிசுத்தொகை கிடைக்கும். தோல்வி அடையும் அணி ரூ.11 கோடியை பெறும்.
கடந்த ஏப்ரல் 8-ம் தேதி மும்பையில் தொடங்கிய 9-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் ஆன்டி முர்ரே, முகுருஸா; பயஸ், போப்பண்ணா ஜோடிகள் வெற்றி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி ஒற்றையர் பிரிவில் ஆன்டி முர்ரே, முகுருஸா 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.
பாரிஸில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆடவர் பிரிவு 3-வது சுற்றில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 6-1, 6-4, 7-6 என்ற நேர் செட்டில் 27-வது இடத்தில் உள்ள குரோஷியாவின் இவோ ஹர்லோவிச்சை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆசிய செஸ் போட்டி: அபிஜித் குப்தா தோல்வி

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீரர் அபிஜித் குப்தா தோல்வியடைந்தார்.
உஸ்பெகிஸ்தானின் தாஸ் கண்ட் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆடவர் பிரிவு முதல் சுற்றில் உலக ஜூனியர் முன்னாள் சாம்பியனான இந்தியாவின் அபிஜித் குப்தா, சீனாவின் பாங் யனை எதிர்த்து விளையாடினார்.
கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அபிஜித் குப்தா ஆரம்பம் முதலே பல்வேறு தவறுகளை செய்தார். தவறான காய் நகர்த்தல்களால் கடைசி வரை அவரால் மீண்டு வர முடியவில்லை. 40-வது நகர்த்தலின் போது அபிஜித் குப்தா தோல்வியடைந்தார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் அதிபன், உஷ்பெ கிஸ்தானின் ஷம்சுதினை எளிதாக தோற்கடித்தார். இந்த ஆட்டம் 20-வது நகர்த்தலில் முடிவுக்கு வந்தது.
மற்ற ஆட்டங்களில் சூர்யா சேகர் கங்குலி, மங்கோலி யாவின் சோக்பயரையும், எஸ்.பி. சேதுராமன், இந்தோ னேஷியாவின் ஆரிப் அப்துலையும், லலித் பாபு சீனாவின் ஹூ லியையும் வீழ்த்தினர். இந்த தொடரில் பட்டம் வெல்பவருக்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
வணிகம் :

கனரா வங்கி நஷ்டம் ரூ.3,905 கோடி

கனரா வங்கியின் மார்ச் காலாண்டு நஷ்டம் ரூ.3,905 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 612 கோடி ரூபாய் லாபமீட்டியது குறிப்பிடத்தக்கது.
மார்ச் காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் சிறிதளவு சரிந்திருக்கிறது. கடந்த வருடம் மார்ச் காலாண்டில் 12,429 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 12,116 கோடி ரூபாயாக இருக்கிறது.
மார்ச் காலாண்டில் மொத்த வாராக்கடன் 9.4 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் மார்ச் காலாண்டில் 3.89 சதவீதமாக இருந்தது. ரூபாய் மதிப்பில் 31,637 கோடி ரூபாய் மொத்த வாராக்கடனாகும். நிகர வாராக்கடன் 2.65 சதவீதத்தில் இருந்து 6.42 சதவீதமாக அதிக ரித்திருக்கிறது.
கடந்த வருடம் மார்ச் காலாண்டில் வாராக்கடனுக் காக 1,009 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த மார்ச் காலாண்டில் இந்த தொகை 6 மடங்கு அதிகரித்து 6,331 கோடி ரூபாயாக இருக்கிறது.
2015-16-ம் நிதி ஆண்டில் நிகர நஷ்டம் 2,812 கோடி ரூபா யாக இருக்கிறது, முந்தைய 2014-15 நிதி ஆண்டில் 2,702 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. மொத்த வரு மானமும் ரூ.48,300 கோடியி லிருந்து ரூ.48,897 கோடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டுக்கு இயக்குநர் குழு டிவிடெண்ட் ஏதும் பரிந் துரை செய்யவில்லை. வெள் ளிக்கிழமை வர்த்தகத்தின் முடி வில் 3.3 சதவீதம் சரிந்து 192.65 ரூபாயில் இந்த பங்கு முடி வடைந்தது.

6 நாள் ஜப்பான் பயணம்: அந்நிய முதலீட்டாளர்களை சந்திக்கிறார் ஜேட்லி

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 6 நாள் பயணமாக நேற்று ஜப்பான் சென்றார். அங்கு முதலீட்டார்கள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்கிறார். ஞாயிறு காலை டோக்கியோ செல்லும் அவர் சாப்ட்பேங்க் தலைவர் மசாயோஷி சானை சந்தித்து இந்தியாவில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளைப் பற்றி கலந்துரையாடுகிறார்.
இரண்டாம் நாளான திங்கள்கிழமையன்று நிக்கி நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும் ஆசியாவின் எதிர்காலம் என்னும் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்கிறார். அதே தினத்தில் ஜப்பானின் பிரதமர் ஷின்சோ அபே-யைச் சந்திக்க இருக்கிறார். அதே நிகழ்ச்சியில் ஜப்பானின் பொருளாதாரம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர்களுடனும் உரையாடுகிறார்.



No comments: