Wednesday 2 November 2016

Daily Current Affairs For Competitive Exam - 2nd November

உலகம் :
அமெரிக்க அதிபர் தேர்தல்: கருத்துக் கணிப்பில்  ஹிலாரி முன்னிலை
அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் முன்னிலை வகிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


"ரியல்கிளியர்பாலிடிக்ஸ்' ஆய்வு அமைப்பு அண்மையில் நடத்திய கருத்துக்கணிப்பில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்பைவிட, ஹிலாரி கிளிண்டன் 3.1 சதவீத அதிக ஆதரவு பெற்று முன்னணி வகித்து வருகிறார்.
மேலும், "பிங்' அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில், ஹிலாரி கிளிண்டன் 5 புள்ளிகள் அதிகம் பெற்று முன்னிலை வகிப்பதாகவும், அவர் வெற்றி பெறுவதற்கு 82 சதவீத வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிலாரியின் மின்னஞ்சல் விவகாரம் குறித்து அந்த நாட்டின் எஃப்.பி.. புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தவிருப்பதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, அவருக்கும், டொனால்டு டிரம்புக்கும் இடையே நெருக்கமான போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.
"நிகலோடியன்' சேனல் அனுமதியை ரத்து செய்தது பாகிஸ்தான்
ஹிந்தி மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட கார்ட்டூன்களை ஒளிபரப்புவதற்காக நிகலோடியன் என்ற சேனலின் அனுமதியை அந்நாடு திங்கள்கிழமை ரத்து செய்தது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் உரியில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் அதற்குப் பதிலடியாக இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை ஆகியவற்றால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது.
பாகிஸ்தான் நடிகர், நடிகைகளின் திரைப்படங்களை இந்தியாவில் வெளியிடக் கூடாது என்று நம்நாட்டில் சில அமைப்புகள் போராட்டம் நடத்தின.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவில் மொழிபெயர்ப்பு செய்யப்படும், உருவாக்கப்படும் நிகழ்ச்சிகளை வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் ஒலி, ஒளிபரப்ப பாகிஸ்தானில் தடை விதிக்கப்படுவதாக கடந்த மாதம் 19-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்தியா :
இந்திய-இலங்கை மீனவர்கள் இன்று பேச்சு
சர்வதேச கடல் பகுதி அருகே மீன்பிடிப்பது, மீனவர்களின் வாழ்வாதாரம், இரு நாட்டு கடற்படையினரின் நடவடிக்கைகள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது தொடர்பாக தில்லியில் புதன்கிழமை (நவம்பர் 2) இந்திய-இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
14 அமைப்புகள்: இதையொட்டி தில்லி ஜவஹர் பவனில் புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 10 அமைப்புகளின் பிரதிநிதிகள், புதுச்சேரியின் காரைக்காலைச் சேர்ந்த நான்கு மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் தில்லி வந்துள்ளனர்.
இதேபோல, இலங்கையின் யாழ்ப்பாணம், மன்னார், முள்ளிவாய்க்கால், வன்னி பகுதிகளைச் சேர்ந்த மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகளும் கூட்டத்தில் பங்கேற்க தில்லி வந்துள்ளனர்.
இன்று நேபாளம் செல்கிறார் பிரணாப்
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 3 நாள் அரசு முறைப் பயணமாக புதன்கிழமை (நவ.2) நேபாளம் செல்கிறார். இந்தப் பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனுக்குப் பிறகு, அப்பதவியில் இருந்த தலைவர்கள் எவரும் நேபாளத்துக்குச் செல்லவில்லை. இந்நிலையில், தற்போது பிரணாப் முகர்ஜி அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. இந்தப் பயணத்தின்போது நேபாளத் தலைவர்கள் பலரைச் சந்திக்கவுள்ள பிரணாப் முகர்ஜி, அந்நாட்டிலுள்ள புராதனச் சிறப்பு மிக்க கோயில்களுக்கும் செல்லவுள்ளார்.
இந்தப் பயணத்தின்போது வர்த்தகம், தொலைத் தொடர்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் எனத் தெரிகிறது.
தமிழ்நாடு : 
"சமுத்ரயான் திட்டம் மூலம் ஆழ்கடல் ஆய்வு நடவடிக்கைகள் தீவிரம்'
ஆழ்கடலுக்குள் நவீன வாகனம் மூலம் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்களை அனுப்பி ஆராய்ச்சி மேற்கொள்ளும் சமுத்ரயான் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று தேசிய கடல்சார் தொழில்நுட்ப மைய திட்ட இயக்குனர் ஜி..ராமதாஸ் கூறினார்.
பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக பொறியியல் கல்வித் துறை சார்பில் அண்மையில் நடைபெற்ற சர்வதேசக் கருத்தரங்கில் அவர் மேலும் பேசியது:
பேராசிரியர்கள் மற்றும் பாடப்புத்தகங்கள் மூலம் மாணவர்கள் பெறும் அடிப்படை பொறியியல் அறிவாற்றல் செயல்வடிவம் பெறுவதற்கு ஆராய்ச்சி நடவடிக்கைகள் அவசியம்.
தொடர் ஆராய்ச்சி நடவடிக்கை மூலம்தான் எந்த ஒரு தொழில்நுட்பத்தையும் அடுத்தகட்ட வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் கொண்டு செல்ல முடியும். ஆராய்ச்சித் துறையில் சிறந்து விளங்கும் நாடுகள் தான், பொருளாதாரத்துக்கு மட்டுமல்லாமல், தொழில்நுட்ப அறிவாற்றலுக்கும் தலைமை தாங்கும் திறன் பெற்றுத் திகழ்கின்றன என்றார் அவர்.
புதுச்சேரி விடுதலை நாள் விழா கொண்டாட்டம்
புதுச்சேரியில் விடுதலை நாள் விழா செவ்வாய்க்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. கடற்கரைச் சாலையில் நடைபெற்ற இந்த விழாவில், தேசியக் கொடியை முதல்வர் நாராயணசாமி ஏற்றிவைத்து, போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
ஏறக்குறைய 300 ஆண்டுகளாக பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து வந்த புதுச்சேரிக்கு, கீழூரில் நடைபெற்ற வாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில், 1954ஆம் ஆண்டு, நவம்பர் 1ஆம் தேதி விடுதலை கிடைத்தது. ஆனால், சுதந்திர தினத்தை மட்டும் புதுச்சேரி அரசு கொண்டாடி வந்தது.
இதனால் புதுச்சேரி விடுதலை நாளை, விழாவாக அரசு கொண்டாட வேண்டும் என்று புதுச்சேரி-பிரெஞ்சிந்திய சுதந்திரப் போராட்டத் தியாகிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை: வானிலை ஆய்வு மையம்
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கிய நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வடதமிழகத்தில் சில இடங்களிலும் தென் தமிழகத்தில் பரவலாகவும் மழை பெய்யும்.
கடந்த 24 மணி நேரத்தில் பாபநாசத்தில் 8 செ.மீ. மழையும், தூத்துக்குடி, தென்காசி, ஆர்.எஸ். மங்கலத்தில் தலா 6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்துக்கு சிறந்த திரைக் கலைஞர் விருது
திரைப்பட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு சிறந்த திரைக் கலைஞர் விருது வழங்கப்பட உள்ளது.
சர்வதேச திரைப்பட விழாவிற்கான போஸ்டர் மற்றும் டிரைலர் இன்று புது தில்லியில் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, சிறந்த திரைக் கலைஞர் விருது திரைப்பட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு வழங்கப்பட உள்ளது.
விரைவில் நடைபெற உள்ள 47வது சர்வதேச திரைப்பட விழாவில் இவ்விருது வழங்கப்படும் என்று கூறினார்.
விளையாட்டு :
தீபாவுக்கு ரூ.4 கோடி வழங்கினார் பிரதமர் மோடி
பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய குண்டு எறிதல் வீராங்கனை தீபா மாலிக்கிற்கு ரூ.4 கோடி பரிசுத் தொகைக்கான காசோலையை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
ஹரியாணா மாநிலம் குர்கானில் நடைபெற்ற ஹரியாணா பொன்விழா நிகழ்ச்சியில் தீபாவுக்கு அந்த காசோலை வழங்கப்பட்டது. மேடையில் இருந்த மோடி, சக்கர நாற்காலியில் வந்த தீபாவுக்காக சில படிகள் இறங்கி வந்து அதனை வழங்கி கெளரவித்தார். உடன், ஹரியாணா ஆளுநர் கப்தான் சிங் சோலங்கி, முதல்வர் மனோகர் லால் கட்டர், மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனில் விஜ் ஆகியோர் இருந்தனர்.
பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ள தீபா, குண்டு எறிதல் போட்டியில் 4.61 மீ. தூரம் எறிந்து இரண்டாம் இடம் பிடித்தார்.
மகளிர் ஆசிய ஹாக்கி: இந்திய அணி வெற்றி
மகளிர் ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி ஹாக்கி போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் மலேசிய அணியை வீழ்த்தியது.
இதன் மூலம் இந்திய அணி தனது பிரிவில் 7 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. இப்பிரிவில், கொரியா, சீனா, ஜப்பான், மலேசியா அணிகள் முறையே அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.
முன்னதாக, பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பூனம் ராணி 7-ஆவது நிமிடத்தில் கோல் அடித்து இந்தியாவின் கணக்கை தொடக்கி வைத்தார்.
அதற்கு பதிலடி கொடுக்க மலேசிய அணி முயன்றும், அந்த அணிக்கான வாய்ப்பு கிடைக்காமலேயே இந்திய அணியின் வீராங்கனைகள் பார்த்துக்கொண்டனர். இதனிடையே, இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளில் 3- இந்திய வீராங்கனைகள் தவறவிட்டனர்.
இருப்பினும், ஆட்டத்தின் 45-ஆவது நிமிடத்தில் 4-ஆவதாக கிடைத்த வாய்ப்பை தீபிகா மிகச்சரியாக பயன்படுத்தி அதை கோலாக்கினார். இதனால் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது.
இறுதி வரையில் மலேசிய அணி கோல் ஏதும் அடிக்காததால் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்திய அணி, வரும் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள தனது அடுத்த ஆட்டத்தில் சீனாவுடன் மோதுகிறது.
வர்த்தகம் :
நேரடி வரிகள் வாரியத் தலைவராக சுஷீல் சந்திரா பொறுப்பேற்பு
மத்திய நேரடி வரிகள் வாரிய (சி.பி.டி.டி.) தலைவராக சுஷீல் சந்திரா செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.
நேரடி வரிகள் மற்றும் வருமான வரி துறை தொடர்பான கொள்கைகளை வகுப்பதில் நேரடி வரிகள் வாரியத்தின் பங்கு மிக முக்கியமானது. இந்த வாரியத்தின் தலைவர் பதவிக்கு சுஷீல் சந்திராவை நியமிக்க பிரதமர் தலைமையிலான உயரதிகாரிகள் நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை (.சி.சி.) அண்மையில் ஒப்புதல் அளித்தது.
சி.பி.டி.டி. தலைவராக பணியாற்றி வந்த ராணி சிங் நாயர் திங்கள்கிழமை ஓய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து அந்த வாரியத்தின் தலைவராக சுஷீல் சந்திரா திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
மத்திய நேரடி வரிகள் வாரியத்தில் தலைவர் மற்றும் ஆறு உறுப்பினர்கள் உள்ளனர். தலைவராக பொறுப்பேற்றுள்ள சுஷீல் சந்திரா, கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பரிலிருந்து சி.பி.டி.டி. வாரியத்தின் புலனாய்வுப் பிரிவு உறுப்பினராக இருந்தவர்.
சென்செக்ஸ் 53 புள்ளிகள் சரிவு
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 53 புள்ளிகள் சரிந்தது. அதேசமயம், நிஃப்டி 0.55 புள்ளிகள் ஏற்றம் கண்டது.
தயாரிப்புத் துறை செயல்பாடு 22 மாதங்களுக்கு பிறகு சென்ற அக்டோபரில் சிறப்பாக உள்ளது என்ற புள்ளிவிவரத்தால் பங்கு வர்த்தகத்தின் தொடக்கம் விறுவிறுப்பாக அமைந்தது.
இருப்பினும், அமெரிக்க அதிபர் தேர்தல், ஜப்பான் மற்றும் அமெரிக்க மத்திய வங்கிகளின் கூட்டம் ஆகியற்றைக் கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் மிகுந்த கவனத்துடன் பங்கு வர்த்தக்தில் ஈடுபட்டதால் பங்கு வர்த்தகம் இறுதியில் சுணக்கம் கண்டது.
குறிப்பாக, ஏற்றுமதியை அதிகம் சார்ந்துள்ள தகவல் தெழில்நுட்பத் துறை பங்குகளின் விலை அதிகபட்சமாக 1.19 சதவீதம் சரிந்தது.
அதேசமயம், உலோகத் துறை பங்குகளின் விலை 3.34 சதவீதம் ஏற்றம் பெற்றது.



No comments: