Saturday 5 November 2016

Daily Current Affairs For Competitive Exam - 5th November

உலகம் :
நேபாளப் பயணம் நட்புறவின் அடையாளம்: பிரணாப் முகர்ஜி
தனது நேபாளப் பயணம் நட்புறவின் அடையாளம் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.


மூன்றுநாள் நேபாளப் பயணத்தை முடித்துக் கொண்டு வெள்ளிக்கிழமை இந்தியா திரும்பிய அவர் மேலும் கூறியதாவது:
இந்தியா-நேபாளம் இடையே ஒருசில சமயங்களில் கருத்துவேறுபாடுகள் ஏற்படுகின்றன. ஒரே குடும்பத்தில் மாறுபட்ட கருத்துகள் தோன்றுவது இயற்கைதான். இருதரப்பு நன்மைகளைக் கருத்தில் கொண்டு இரு நாடுகளும் இணைந்து செயல்படும். எனது நேபாளப் பயணம் நட்புறவின் அடையாளம் என்றார்.
முன்னதாக, தனது பயணத்தின் இறுதிக்கட்டமாக நேபாளத்தின் ஜனக்பூர் நகரில் உள்ள ஜானகி (சீதை) கோயிலுக்குச் சென்றார். விமான நிலையத்தில் இருந்து கோயிலுக்குச் செல்லும் வழியில் ஏராளமான பள்ளிச் சிறார்கள் கூடி நின்று அவருக்கு வரவேற்பு அளித்தனர். இதில் பல சிறுவர்கள் ராமாயணத்தில் வரும் கதாபாத்திரங்கள் போல் வேடமணிந்திருந்தனர்.
பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் அமலுக்கு வந்தது
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வற்கான பாரீஸ் ஒப்பந்தம், சர்வதேச சட்டமாக வெள்ளிக்கிழமை அமலுக்கு வந்தது.
இது, அறிவியலாளர்களின் எதிர்பார்ப்பை விட வேகமாக புவி வெப்பமடைந்ததால் அச்சம் அதிகரித்ததை அடுத்து, புவி வெப்பமயமாதல் பிரச்னையில் உலக நாடுகள் தீவிர அக்கறை கொண்டுள்ளதைக் காட்டுகிறது.
பாரீஸ் ஒப்பந்தத்தில் 96 நாடுகள், அதாவது மூன்றில் 2 பங்கு நாடுகள் முறைப்படி இணைந்ததை அடுத்து, இந்த ஒப்பந்தம், சட்டமாக அமலுக்கு வந்துள்ளது. அடுத்த வாரத்தில் மேலும் பல நாடுகள், அந்த ஒப்பந்தத்தில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏவுகணைத் தாக்குதலை முறியடிக்க பாதுகாப்பு அரண்: தென் கொரியாவில் அமைக்கிறது அமெரிக்கா
ஏவுகணைத் தாக்குதலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் விதமான புதிய தடுப்புத் திட்டத்தை தென் கொரியாவில் அடுத்த எட்டு முதல் பத்து மாதங்களில் அமைக்க உள்ளதாக அமெரிக்க மூத்த தளபதி தெரிவித்தார்.
தென் கொரியாவில் உள்ள அமெரிக்கப் பாதுகாப்புப் படைகளின் தளபதியாக உள்ள வின்சென்ட் புரூக்ஸ், தலைநகர் சியோலில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசுகையில் இதனைத் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
ஏவுகணைகளை நடுவானில் தடுத்து வீழ்த்தும் அதிநவீன பாதுகாப்புத் திட்டத்தை தென் கொரியாவில் அமைப்பதாக அமெரிக்கா ஏற்கெனவே அறிவித்தது. வட கொரியா கடந்த ஜனவரி மாதம் நான்காவது முறையாக அணு ஆயுதப் பரிசோதனை நடத்தியது. அதைத் தொடர்ந்து வேறு பல ஏவுகணைப் பரிசோதனைகளையும் அந்த நாடு நிகழ்த்தியது.
இந்தியா :
மீனவர் பிரச்னை: தில்லியில் இன்று இந்திய-இலங்கை அமைச்சர்கள் கூட்டம்
சர்வதேச கடல் பகுதி அருகே மீன் பிடிப்பது, மீனவர்களின் வாழ்வாதாரம், இரு நாட்டு கடற்படையினரின் நடவடிக்கைகள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது குறித்து விவாதிப்பதற்காக தில்லியில் இரு நாட்டு வெளியுறவு, வேளாண் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
தகவல் உரிமை: இனி ஆன்-லைனிலும் புகார் பதியலாம்
மத்திய தகவல் ஆணையத்திடம் (சிஐசி) புகார்களையும், மேல்முறையீடுகளையும் இணையதளம் (ஆன்-லைன்) மூலமாக பதிவு செய்யும் வசதி விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மத்திய தகவல் ஆணையம் தொடர்பான 2 நாள் மாநாட்டை, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வரும் திங்கள்கிழமை தொடக்கி வைக்கிறார். அப்போது, மத்திய தகவல் ஆணையத்திடம் இணையதளம் மூலம் புகார் பதிவு செய்யும், "-கோர்ட்' என்ற நடைமுறையை அவர் தொடக்கி வைக்கவுள்ளார்.
தமிழ்நாடு : 
சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு
சென்னை தேராபந்த் மஹிளா மண்டல் பொன் விழாவை முன்னிட்டு, சிறப்பு அஞ்சல் உறை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
மேலும், சமூகத்திற்கு சிறப்பான சேவை அளிக்கும் வகையில் பெண்களுக்கான செல்லிடப்பேசி செயலியும் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.
விழாவுக்கு அகில பாரதிய தேராபந்த் மஹிளா மண்டலின் தலைவர் கல்பனா பெத் தலைமை வகித்தார். தேராபந்த் மஹிளா மண்டல் தலைவர் மீனா புன்மியா, ஆச்சார்ய ஸ்ரீ மகா ஷ்ரமஞ்சி, முனி ஸ்ரீ ப்ரஷாந்த் குமார்ஜி, முனி ஸ்ரீ குமுத் குமார்ஜி, முனி ஸ்ரீ நரேஷ் குமார்ஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இன்று தேசிய திறனாய்வு தேர்வு
தேசிய திறனாய்வு தேர்வு சனிக்கிழமை நடைபெறுகிறது.
இந்தத் தேர்வை 449 தேர்வு மையங்களில் 6,580 பள்ளிகளிலிருந்து 1,55,657 மாணவர்கள் எழுத உள்ளனர். நுழைவுச் சீட்டு நவம்பர் 1-ஆம் தேதி முதல் இணையதளத்தில் பள்ளி நிர்வாகம் சார்பில் பதிவிறக்கம் செய்து வழங்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே (காலை 8.30) தேர்வு மையங்களை சென்றடைய வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
விளையாட்டு :
காவல் துறையினருக்கான துப்பாக்கிச் சுடுதல்: தமிழக கமாண்டோ அணி சாம்பியன்
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் இரண்டு நாள்கள் நடைபெற்ற காவல் துறையினருக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தமிழக கமாண்டோ அணி சாம்பியன் பட்டம் வென்றது.
தமிழ்நாடு காவல் துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் வியாழக்கிழமை தொடங்கி, இரண்டு நாள்கள் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள 8 மண்டலங்களைச் சேர்ந்த 250 பேர் போட்டியில் கலந்து கொண்டனர்.
ரைபிள், பிஸ்டல், கார்பைன், ரிவால்வர் போன்ற துப்பாக்கிகளைக் கொண்டு பல்வேறு பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. ரைபிள் பிரிவில் தென் மண்டலம் மற்றும் சென்னை பெருநகர காவல் பிரிவு அணியினர் முதலிடத்தைப் பிடித்தனர். பிஸ்டல், ரிவால்வர், கார்பைன் ஆகிய பிரிவுகளில் தமிழக கமாண்டோ படையினர் முதலிடத்தைப் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
வர்த்தகம் :
டாடா சன்ஸ் மனிதவள மேம்பாட்டுப் பிரிவு தலைவராக எஸ். பத்மநாபன் நியமனம்
மனிதவள மேம்பாட்டுத் துறை தலைவராக எஸ்.பத்மநாபனை டாடா சன்ஸ் நியமனம் செய்துள்ளது.
இதுகுறித்து டாடா சன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தற்போது டாடா பிஸினஸ் எக்ஸலன்ஸ் குழுமத்தில் செயல் தலைவர் பதவியில் இருக்கும் எஸ்.பத்மநாபனுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, டாடா குழுமத்தின் மனிதவள மேம்பாட்டுத் தலைவர் பொறுப்பையும் இனி அவர் கூடுதலாக கவனிப்பார்.
தற்போது குழுமத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருக்கும் கோபிசந்த் கட்ரகடா அந்தப் பொறுப்பில் தொடர்ந்து நீடிப்பார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாடா சன்ஸ் தலைவர் பதவியிலிருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டதையடுத்து, நிர்வாக அமைப்பில் அந்த நிறுவனம் பல மாற்றங்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.


No comments: