Saturday 12 November 2016

Daily Current Affairs For Competitive Exam - 12th November

உலகம் :

அமெரிக்கக் குடியேற்றக் கொள்கையில் மாற்றம் : டிரம்ப் ஆட்சி மாற்றக் குழு பரிசீலனை
மெரிக்காவில் டொனால்டு டிரம்ப் தலைமையில் அடுத்ததாக அமையவிருக்கும் அரசில் தற்போதுள்ள குடியேற்றக் கொள்கையில் மாற்றம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக ஆட்சி மாற்றத்துக்கான நடவடிக்கைகளை கவனித்துக் கொள்ளும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து அந்தக் குழுவினர் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
டிரம்ப் தலைமையிலான புதிய அரசில், மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்புவது, குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வருவோருக்கு நுழைவு இசைவு சீட்டு (விசா) வழங்க மறுப்பது, குடியேற்றக் கொள்கையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது உள்ளிட்ட மாற்றங்களை மேற்கொள்வது குறித்து பரிசீலித்து வருகிறோம்.
மதவெறி சித்தாங்களால் ஏற்படக்கூடிய விளைவுகள், அணு ஆயுதங்கள், இணையதளத் தாக்குதல் ஆகிய மூன்று விவகாரங்களுக்கு டிரம்ப் அரசு முக்கியத்துவம் அளிக்கும்.
குடியேற்றக் கொள்கைகளைப் பொருத்தவரை, 10 அம்சத் திட்டங்களை உருவாக்கி, விதிமுறைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.
இந்தியா :
இந்தியா - ஜப்பான் இடையே அணுசக்தி ஒப்பந்தம்: மோடி - அபே முன்னிலையில் கையெழுத்து
இந்தியா - ஜப்பான் நாடுகளுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையெழுத்தானது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன் மூலம், அணு ஆயுதப்பரவல் தடை ஒப்பந்தத்தில் (என்பிடி) கையெழுத்திடாமலேயே ஜப்பானுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
இதுதவிர, இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்தியா-ஜப்பான் இடையேயான வருடாந்திர கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, மூன்று நாள் அரசு முறைப் பயணமாக வியாழக்கிழமை ஜப்பான் சென்ற பிரதமர் மோடிக்கு, டோக்கியோவில் அரசு சார்பில் வெள்ளிக்கிழமை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், அந்நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபேவை மோடி சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, இரு தரப்பு வர்த்தகம், முதலீடு, விண்வெளி, பயங்கரவாதத்தை ஒடுக்குவது, திறன் மேம்பாட்டில் ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே அணுசக்தி துறையில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, இரு நாட்டு பிரதமர்கள் முன்னிலையில் கையெழுத்தானது. இரு நாடுகளுக்கு இடையே 6 ஆண்டுகளாக நீடித்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டுள்ளது.
அனைத்து ஐ.டி நிறுவனங்களிலும் "சைபர்' அதிகாரியை நியமிப்பது கட்டாயமாக்கப்படும்: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு
இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) அலுவலகங்களிலும் "சைபர்' பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்படுவது கட்டாயமாக்கப்படும் என்று மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
தில்லியில் பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களின் பொருளாதார ஆசிரியர்கள் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில் ரவிசங்கர் பிரசாத் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:
கூடுதல் பணியிடங்கள்: கணினி, இணையவழியில் நிகழும் குற்றங்கள், அச்சுறுத்தல் போன்றவற்றை எதிர்கொள்ள மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. நம் நாட்டில் கணினி வழி தகவல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அமைப்பான கணினி அவசரகால தடுப்புக் குழுவில் (சிஇஆர்டி-ஐஎன்) கூடுதலாக 26 பணி இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
நீதிபதிகள் நியமனம்: 34 பேருக்கு ஒப்புதல்: கொலீஜியம் பரிந்துரைத்த 43 பேர் பட்டியலை திருப்பி அனுப்பியது மத்திய அரசு
நாடு முழுவதும் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களுக்கு "கொலீஜியம்' குழுவால் பரிந்துரைக்கப்பட்ட 77 பேரில் 34 பேரின் நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள பரிந்துரைகள் மறு பரிசீலனைக்காக திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
நாடு முழுவதும் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி முன்னாள் ராணுவ அதிகாரி அனில் கபோத்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் சிவகீர்த்தி சிங், எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, "நீதிபதிகள் நியமனத்துக்காக பரிந்துரைக்கப்பட்ட 77 பெயர்களில் 34 பெயர்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மீதமுள்ள பரிந்துரைகள், கொலீஜியத்தின் மறு பரிசீலனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. நீதிபதிகள் நியமனத்துக்கான பரிந்துரைகள் எதுவும் மத்திய அரசிடம் நிலுவையில் இல்லை' என்றார்.
தமிழ்நாடு : 
இல்லந்தோறும் இணையம் திட்டம்: விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
இல்லந்தோறும் இணையம் திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்பத்தை அளிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இல்லந்தோறும் இணையம் என்ற கொள்கையின் அடிப்படையில், அதிவேக அகண்ட இணைய சேவைகளை முதல்கட்டமாக தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்களில் வழங்கி வருகிறது. இரண்டாம் கட்டமாக, அனைத்து நகராட்சி பகுதிகளிலும் விரிவுபடுத்துவதற்காக வரும் 15 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதுவரை 7,317 பேர் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த நிலையில், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசத்தை நீட்டிக்குமாறு விருப்பமுள்ளவர்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன. இதையடுத்து விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அனுப்புவதற்கான அவகாசம் வரும் 30 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் தொடர்பான அனைத்து தகவல்களையும் இணையதளத்தில் (www.tactv.in)  வரும் 14 -ஆம் தேதி முதல் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு நிறுவனத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 2911-ஐ தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவ. 14 முதல் புதிய ரூ.500 நோட்டு
வரும் திங்கள்கிழமை (நவ. 14) முதல் புதிய 500 ரூபாய் நோட்டுகள் அதிகளவு புழக்கத்துக்கு வரும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
செல்லாத 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பொது மக்கள் மாற்ற வங்கிக் கிளைகளுக்குச் செல்கின்றனர். அவ்வாறு மாற்றும் போது, அவர்களுக்கு 2 ஆயிரம், நூறு ரூபாய் நோட்டுகள் அளிக்கப்படுகின்றன.
500 ரூபாய் நோட்டு என்பது சில இடங்களில் ஓரிருவருக்கு மட்டுமே அளிக்கப்படுகின்றன. இதுகுறித்து, வங்கி அதிகாரிகள் கூறுகையில், "தமிழகத்தைப் பொருத்தவரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிகளவு வழங்கப்படுகின்றன. பழைய 500 ரூபாய் நோட்டுகளை மக்கள் திருப்பி அளித்து வரும் வேளையில், புதிய 500 ரூபாய் நோட்டுகள் அடுத்த வாரம் முதல் அதிகளவு புழக்கத்தில் விடப்படும்.
விளையாட்டு :
விஜய், புஜாரா அபார சதம்! தக்க பதிலடி கொடுத்த இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 319 ரன்கள் எடுத்துள்ளது. விஜய், புஜாரா ஆகிய இருவரும் அற்புதமாக விளையாடி சதம் எடுத்துள்ளார்கள்.
ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 159.3 ஓவர்களில் 537 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இந்தியத் தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், முகமது சமி, உமேஷ் யாதவ், அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 23 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் 25, கெளதம் கம்பீர் 28 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு இந்தியா இன்னும் 474 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. அதேநேரத்தில் பாலோ-ஆனை தவிர்ப்பதற்கு இந்தியா 275 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.
ஆஸ்திரேலியத் தொடர்: இந்திய ஹாக்கி அணிக்கு ரகுநாத் கேப்டன்
ஆஸ்திரேலியாவில் வரும் 23-ஆம் தேதி தொடங்கவுள்ள 4 நாடுகள் ஹாக்கித் தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கேப்படனும், கோல் கீப்பருமான ஸ்ரீஜேஷ் முழங்கால் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. இதையடுத்து ரகுநாத் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் வாகை சூடிய இந்திய அணியில் ரகுநாத் இடம்பெறவில்லை. அப்போது அவருக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது.
இந்தப் போட்டியில் இந்தியா தவிர, ஆஸ்திரேலியா, மலேசியா, நியூஸிலாந்து ஆகிய அணிகளும் விளையாடுகின்றன. அதைத் தொடர்ந்து இந்தியா-ஆஸ்திரேலியா இடையே டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.
வர்த்தகம் :
தொழிலக உற்பத்தி விகிதம் 0.7% வளர்ச்சி
இந்திய தொழிலக உற்பத்தி விகிதம் சென்ற செப்டம்பர் மாதத்தில் 0.7% வளர்ச்சி கண்டது என்று மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது: சென்ற செப்டம்பரில் தயாரிப்பு, பொறியியல் பொருள்கள், சுரங்கம் ஆகிய துறைகளின் உற்பத்தி சரிவடைந்தது.
இதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் 3.7 சதவீதமாக அதிகரித்து காணப்பட்ட தொழிலக உற்பத்தி விகிதம் நடப்பு ஆண்டு இதே கால அளவில் 0.7 சதவீத அளவுக்கே வளர்ச்சி கண்டுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில் நாட்டின் தொழிலக உற்பத்தி விகிதம் 4 சதவீதத்திலிருந்து 0.1 சதவீதமாக சரிவடைந்துள்ளது. குறிப்பாக, கடந்த நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் 4.2 சதவீதமாக அதிகரித்து காணப்பட்ட தயாரிப்பு துறை உற்பத்தி நடப்பு ஆண்டில் 0.8 சதவீதமாக குறைந்துள்ளது.

No comments: