உலகம் :
வெள்ளியன்று விண்வெளிக்கு பறக்கிறார் உலகின் வயதான விண்வெளி வீராங்கனை!
நாளை வெள்ளிக்கிழமை அன்று விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பறக்க உள்ள அமெரிக்காவின் பெக்கி விட்சன் உலகின் மிக வயதான விண்வெளி வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில்பணிபுரியும் விண்வெளி வீராங்கனை பெக்கி விட்சன் (56). உலக நாடுகளின் கூட்டு முயற்சியினால் விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாளை பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இது இவரது மூன்றாவது விண்வெளி பயணமாகும். இதன் மூலம் உலகிலேயே மிக அதிக வயதில் விண்வெளி பயணம் செய்த முதல் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற உள்ளார்.
அமெரிக்கா: நிக்கி ஹேலிக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி?
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பதவிக்குப் பரிசீலனையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பல்வேறு அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்திருப்பதாவது:
குடியரசுக் கட்சியின் இளம் நட்சத்திரமாக உள்ள நிக்கி ஹேலி (44) தற்போது தெற்கு கரோலினா மாகாண ஆளுநராக உள்ளார். அந்தக் கட்சியின் பிரபலமான இளம் தலைமுறைத் தலைவர்களில் ஒருவரான அவர், மிகவும் திறமைசாலி என்று பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருபவர். தேசிய அளவில் செயல்பட வேண்டியவர்கள் என்ற பட்டியலில் இடம் பெற்றவர்.
குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்வின்போது, துணை அதிபர் பதவிக்குப் பரிசீலிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. எனினும், மாகாண ஆளுநர் பொறுப்பிலேயே தொடர விரும்புவதாக அப்போது அவர் தெரிவித்தார்.
இந்தியா :
ஜம்மு- காஷ்மீர் முன்னாள் ஆளுநர் எஸ்.கே. சின்ஹா காலமானார்
ஜம்மு- காஷ்மீரின் முன்னாள் ஆளுநர் எஸ்.கே. சின்ஹா, உடல் நலப் பிரச்னை காரணமாக தில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வியாழக்கிழமை காலை இறந்தார். அவருக்கு வயது 92.
கடந்த 1-ஆம் தேதி தொடை மற்றும் விலா எலும்புகளில் முறிவு ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலனளிக்காமல் வியாழக்கிழமை அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு மனைவி, இலங்கைக்கான இந்தியத் தூதராக பணியாற்றி வரும் மகன் ஒய்.கே. சின்ஹா மற்றும் 3 மகள்கள் உள்ளனர். அவரது இறுதிச் சடங்குகள் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெறும்.
1943-ஆம் ஆண்டு ராணுவத்தில் இணைந்த அவர், நேபாளத்துக்கான இந்தியத் தூதராகவும், அஸ்ஸாம் மாநில ஆளுநராகவும் பணியாற்றியிருந்தார்.
தேசிய நெடுஞ்சாலைகளில் நவம்பர் 24-ஆம் தேதி வரை சுங்க கட்டணம் ரத்து: கட்கரி அறிவிப்பு!
புதிய ரூபாய் நோட்டுக்கள் விவகாரத்தில் நாடு முழுவதும் நிலைமை இன்னும் சீரடையாத காரணத்தினால் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டண ரத்து சலுகை வரும் 24ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக , புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 8-ஆம் தேதி இரவு அதிரடியாக அறிவித்தார்.
இதனால் உண்டான குழப்பமான சூழல் காரணமாக நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் நவம்பர் 11-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய சாலைப்போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி 9-ம் தேதி அன்று இரவு அறிவித்தார்.
தமிழ்நாடு :
எண்ணூர் அனல் மின் நிலையம் மூடப்பட்டது
சென்னையை அடுத்த எண்ணூரில் செயல்பட்டு வந்த அனல் மின்நிலையம் மூடப்பட்டது.
அனல் மின் நிலையத்தின் நிர்ணயிக்கப்பட்ட ஆயுள் முடிவடைந்துவிட்டதால் அதன் செயல்பாடு நவம்பர் 16-ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
எண்ணூர் அனல்மின் நிலையம் 1970-ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கியது. இந்த அனல் மின்நிலையத்துக்கான மின்உற்பத்திக் காலம் 40 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட காலத்தைவிட 6 ஆண்டுகள் அதிகமாக செயல்பட்டு வந்தது.
46 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த அனல் மின்நிலையத்தில் 1000 நிரந்தர ஊழியர்களும், 300 ஒப்பந்த ஊழியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 5 அலகுகளில் 450 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
விளையாட்டு :
ஊக்கமருந்து தரம்வீர் சிங்குக்கு 8 ஆண்டு தடை
ஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக இந்திய தடகள வீரர் தரம்வீர் சிங்குக்கு 8 ஆண்டு தடை விதித்துள்ளது தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (நாடா).
200 மீ. ஓட்டப் பந்தய வீரரான தரம்வீர் சிங் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றிருந்தார். அவர் கடந்த ஆகஸ்டில் ரியோவுக்கு புறப்பட தயாராக இருந்த நிலையில், ஊக்கமருந்து பயன்படுத்தியது அம்பலமானது. இதையடுத்து அவர் ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பப்படவில்லை.
கடந்த ஜூலையில் பெங்களூரில் நடைபெற்ற இந்திய கிராண்ட்ப்ரீ போட்டியின்போது தரம்வீர் சிங்கிடம் இருந்து பெறப்பட்ட சிறுநீர் மாதிரியில் இருந்து அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
சீன ஓபன் காலிறுதியில் சிந்து, ஜெயராம்
சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, அஜய் ஜெயராம் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
சீனாவின் புஜெள நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற 2-ஆவது சுற்றில் சிந்து 18-21, 22-20, 21-17 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் பெய்வான் ஜங்கை தோற்கடித்தார். சிந்து தனது காலிறுதியில் சீனாவின் ஹீ பிங்ஜியாவை எதிர்கொள்கிறார்.
ஆடவர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் அஜய் ஜெயராம் 20-22, 21-19, 21-12 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் வெய் நேனை தோற்கடித்தார். ஜெயராம் தனது காலிறுதியில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனும், ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியனுமான சீனாவின் சென் லாங்கை சந்திக்கிறார்.
அதேநேரத்தில் மற்றொரு இந்திய வீரரான எச்.எஸ்.பிரணாய் 16-21, 9-21 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் மார்க் ஸ்வைப்லரிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
ஆஸி. தேர்வுக்குழு தலைவராக டிரெவர் நியமனம்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இடைக்கால தேர்வுக்குழு தலைவராக டிரெவர் ஹான்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல், தேர்வுக்குழுவில் புதிய உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்த ராட் மார்ஷ், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா இழந்ததன் காரணமாக தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
இதையடுத்து தேர்வுக்குழு உறுப்பினராக இருந்த டிரெவர், இப்போது தலைவராகியுள்ளார். இவர், ஏற்கெனவே 1993 முதல் 2006 வரை தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்தவர். அதில் 10 ஆண்டுகள் தேர்வுக்குழு தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வர்த்தகம் :
155 கோடி டாலர் அபராதம்: நடுவர் குழு விசாரிக்க நோட்டீஸ் அனுப்பியது ரிலையன்ஸ்
ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு சொந்தமான எரிவாயுவை முறைகேடாக எடுத்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் 155 கோடி டாலர் அபராதம் விதிக்கப்பட்ட விவகாரத்தை நடுவர் குழு விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டுமென ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதன் விவரம்: வங்காள விரிகுடாவின் கிருஷ்ணா-கோதாவரி (கே.ஜி.) படுகையில் ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமான எண்ணெய் - எரிவாயு வயல்கள் உள்ளன.
அங்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஊடுருவி ஏழு ஆண்டுகளாக இயற்கை எரிவாயுவை எடுத்து விற்பனை செய்ததாகப் புகார் எழுந்தது. கடந்த 2009-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல், 2015-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை 1,100 கன மீட்டர் அளவிலான எரிவாயுவை ரிலையன்ஸ் நிறுவனம் எடுத்து விற்பனை செய்துள்ளது.
No comments:
Post a Comment