Monday 31 October 2016

Daily Current Affairs For Competitive Exam - 1st November

உலகம் :
என்எஸ்ஜி விவகாரம்: இந்தியா-சீனா மீண்டும் பேச்சுவார்த்தை
அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராக சேரும் விவகாரம் தொடர்பாக இந்தியாவும், சீனாவும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.


இந்த விவகாரம் தொடர்பாக தில்லியில் கடந்த செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி இந்தியாவும், சீனாவும் முதல்கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தின. அதையடுத்து, சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இரு நாடுகளும் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையில் திங்கள்கிழமை ஈடுபட்டன.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
பெய்ஜிங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரி (ஆயுதக்குறைப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பு) அமந்தீப் சிங் கில்லும், சீனாவின் ஆயுதக் குறைப்பு விவகாரத்துறை தலைமை இயக்குநர் வாங் குன்னும் கலந்து கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாகவும், பயனுள்ளதாகவும் அமைந்திருந்தது. பெய்ஜிங்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, என்எஸ்ஜி அமைப்பில் இந்தியாவை உறுப்பினராக சேர்ப்பதற்கு அணுஆயுத தடை ஒப்பந்தத்தில் சேர வேண்டும் என்று சீனா வலியுறுத்தி வருவதை இந்தியா எழுப்பியுள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் குறிப்பிட்டன.
லெபனான் அதிபராக மைக்கேல் ஆவுன் தேர்வு
லெபனான் அதிபராக முன்னாள் ராணுவ தளபதி மைக்கேல் ஆவுன் அந்த நாட்டு நாடாளுமன்றத்தால் திங்கள்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, அந்த பதவிக்காக கடந்த 2 ஆண்டுகளாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்தது.
லெபனான் அதிபராக இருந்த மைக்கேல் ஸ்லீமனின் பதவிக் காலம் கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதத்துடன் முடிவடைந்தது.
எனினும், அவருக்கு அடுத்தபடியாக அந்தப் பதவிக்கு யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் பல்வேறு கட்சியினரிடையே கருத்து வேறுபாடு நிலவியதால், நாடாளுமன்றத்தில் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் இழுபறி நீடித்து வந்தது.
கிறிஸ்துவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட அந்தப் பதவிக்குப் போட்டியிட விரும்பிய சுதந்திர தேசபக்தி இயக்கக் கட்சித் தலைவர் மைக்கேல் ஆவுனுக்கு, பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், அதிபர் பதவி காலியாக இருந்ததால் ஏற்பட்டிருந்த அரசியல் வெற்றிடத்தைப் போக்கும் வகையில், மைக்கேல் ஆவுனை இவ்வளவு காலம் எதிர்த்து வந்த கிறிஸ்துவ லெபனான் கட்சியின் தலைவர் சமீர் கீகீயும், முன்னாள் பிரதமர் சாத் ஹரிரியும் அவருக்கு ஆதரவு அளிக்க முன்வந்தனர்.
இதையடுத்து, நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பின் இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்று, மைக்கேல் ஆவுன் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியா :
கடற்படைத் தளபதி லம்பா மியான்மருக்கு 4 நாள் பயணம்
இந்திய கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் சுனில் லம்பா, 4 நாள் பயணமாக மியான்மருக்கு திங்கள்கிழமை புறப்பட்டுச் சென்றார். அங்கு இருதரப்பு ராணுவ உறவுகளை மேம்படுத்துவது குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
அட்மிரல் லம்பாவின் அதிகாரப்பூர்வ பயணம் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இந்தப் பயணத்தின்போது, மியான்மரின் முதல் துணை அதிபர் யூ மியின்ட் ஸ்வே, ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் செü வின், கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் டின் ஆங் சான் ஆகியோரை லம்பா சந்தித்துப் பேச உள்ளார்.
அங்குள்ள தேசியப் பாதுகாப்பு கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றும் லம்பா, பாதுகாப்புச் சேவை அகாதெமி, கடற்படை பயிற்சித் தளம், மியான்மரிலேயே தயாரிக்கப்பட்ட போர்க் கப்பலான யுஎம்எஸ் ஆங் செயா ஆகியவற்றையும் பார்வையிட உள்ளார்.
ரயில் மோதல்களை தவிர்க்க புதுக் கருவி: கரக்பூர் ஐஐடி உருவாக்குகிறது
ரயில்கள் ஒன்றோடொன்று மோதுவதைத் தடுக்கும் மின்னணு ரயில் மோதல் தடுப்பு சாதனத்தை மேம்படுத்தும் வகையில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கருவியை, மேற்கு வங்கம், கரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை (ஐஐடி) சேர்ந்த விஞ்ஞானிகள் வெற்றிகரமாக சோதித்தனர்.
இதுகுறித்து விஞ்ஞானிகள் குழுவுக்குத் தலைமையேற்ற பேராசிரியர் பல்லப் தாஸ்குப்தா, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
மின்னணு ரயில் மோதல் தடுப்பு சாதனத்தை மேம்படுத்தும் வகையிலான புதிய கருவியை, ஐஐடி-கரக்பூரின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையும் இந்திய ரயில்வேயின் ஆய்வு, வடிவமைப்பு, தர அமைப்பு (ஆர்டிஎஸ்ஓ), சேவை மேம்பாட்டுக் குழு ஆகியவையும் (எஸ்ஐஜி) இணைந்து உருவாக்கியுள்ளன.
ரயில் மோதல் தடுப்புச் சாதனத்தில் ஏற்படும் தவறுகளால் மோசமான பின்விளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதால், அத்தகைய தவறுகளைக் குறைக்கும் வகையில் புதிய கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு : 
புதுச்சேரி விடுதலை நாள் விழா: முதல்வர் நாராயணசாமி தேசிய கொடியேற்றினார்
புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விடுதலை நாள் விழாவில் முதல்வர் நாராயணசாமி தேசிய கொடியேற்றினார்.
300 ஆண்டுகள் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து புதுச்சேரி விடுதலை பெற்ற விழா கடற்கரைச் சாலையில் கொண்டாடப்பட்டது. அங்கு நடந்த விழாவில், தேசிய கொடியை ஏற்றி வைத்து நாராயணசாமி அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.
ஏறக்குறைய 300  ஆண்டுகளாக பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து வந்த புதுச்சேரிக்கு 1954ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி விடுதலை கிடைத்தது. ஆனால் சுதந்திரதினத்தை மட்டும் புதுச்சேரி அரசு கொண்டாடி வந்தது.
இதனால் புதுச்சேரி விடுதலை நாளை அரசு கொண்டாட வேண்டும் என்று புதுச்சேரி-பிரெஞ்சிந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
விளையாட்டு :
ஃபார்முலா 1: ஹாமில்டன் முதலிடம்
இதன்மூலம் அவர் இந்த சீசனில் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டார்.
2016 சீசன் ஃபார்முலா 1 கார் பந்தயம் 21 சுற்றுகளைக் கொண்டதாகும். இதன் 19-ஆவது சுற்று மெக்ஸிகோ கிராண்ட்ப்ரீ என்ற பெயரில் மெக்ஸிகோ சிட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
71 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் மெர்ஸிடஸ் டிரைவர் லீவிஸ் ஹாமில்டன் 1 மணி, 40 நிமிடம், 31.402 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடத்தைப் பிடித்தார். இந்த சீசனில் அவர் 8-ஆவது வெற்றியைப் பெற்றிருக்கிறார். ஒட்டு மொத்தத்தில் அவர் பெற்ற 51-ஆவது வெற்றி இது.
மகளிர் டென்னிஸ் தரவரிசை 5-ஆவது இடத்தில் டொமினிகா
மகளிர் ஒற்றையர் டென்னிஸ் தரவரிசையில் ஸ்லோவேகியாவின் டொமினிகா சிபுல்கோவா 3 இடங்கள் முன்னேறி 5-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
டபிள்யூடிஏ பைனல்ஸ் என்றழைக்கப்படும் மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றதன் மூலம் 8-ஆவது இடத்தில் இருந்து 5-ஆவது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளார் டொமினிகா.
டபிள்யூடிஏ பைனல்ஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பரை வீழ்த்தி டொமினிகா சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
வர்த்தகம் :
வர்த்தகம் செய்ய உகந்த மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரம், தெலங்கானா முதலிடம்
எளிதில் வர்த்தகம் செய்வதற்கு உகந்த மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலில் ஆந்திரப் பிரதேசமும், தெலங்கானா மாநிலமும் முதலிடத்தைப் பிடித்துள்ளன.
உலக வங்கியுடன் இணைந்து மத்திய தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறை (டிஐபிபி) நடத்திய ஆய்வறிக்கையை மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்டது. அந்த ஆய்வின் முடிவில், ஆந்திரமும், தெலங்கானாவும் முதலிடத்தைப் பிடித்துள்ளன.
கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த குஜராத் மாநிலம், தற்போது மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. நிகழாண்டில், சத்தீஸ்கர் மாநிலம், தொடர்ச்சியாக 4 ஆவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது. அதையடுத்து, மத்தியப் பிரதேசம் (5), ஹரியாணா(6), ஜார்க்கண்ட்(7), ராஜஸ்தான்(8), உத்தரகண்ட்(9), மகாராஷ்டிரம்(10) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
கர்நாடகம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பிகார் ஆகிய மாநிலங்கள், வர்த்தகம் செய்வதற்கு விரும்பும் மாநிலங்களாக வரையறுக்கப்பட்டுள்ளது.



No comments: