Saturday 1 October 2016

Daily Current Affairs For Competitive Exam - 1st October

உலகம் :

இஸ்லாமாபாத் சார்க் மாநாட்டை ஒத்திவைத்தது பாகிஸ்தான்
இந்தியா உட்பட 5 நாடுகள் புறக்கணித்திருப்பதால் சார்க் மாநாட்டை பாகிஸ்தான் ஒத்திவைத்துள்ளது.


வரும் நவம்பர் 9, 10 தேதி களில் இஸ்லாமாபாதில் 19-வது சார்க் மாநாடு நடைபெற இருந்தது. இதில் பிரதமர் மோடி உட்பட சார்க் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில் காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணித்தது. இதற்கு ஆதரவாக வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் மாநாட்டை புறக்கணித்தன.
இந்த வரிசையில் 5-வது நாடாக இலங்கையும் சார்க் மாநாட்டில் பங்கேற்க முடியாது என்று அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த நாட்டு வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சார்க் மாநாட்டின் எந்தவொரு முடிவும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் மட்டுமே எடுக் கப்படுவது வழக்கம். தெற்காசி யாவின் தற்போதைய சூழல் சார்க் மாநாட்டை நடத்துவதற்கு உகந்ததாக இல்லை. எனவே இந்த மாநாட்டில் இலங்கை பங்கேற்கவில்லை.
இந்தியாவின் நடவடிக்கையால் விரைவில் பாரிஸ் ஒப்பந்தம் நிறைவேறும்: பான் கி மூன் நம்பிக்கை
இந்தியா ஒப்புதல் வழங்க முன்வந்திருப்பதால் பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் விரைவிலேயே நிறைவேறும் என ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி - மூன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு இறுதியில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த மாநாட்டில் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டது. சர்வதேச அளவில் சுமார் 40 சதவீத பசுமை குடில் வாயு வெளியேற்றத்துக்குக் காரணமாக உள்ள அமெரிக்காவும் சீனாவும் இந்த ஒப்பந்தத்துக்கு ஏற்கெனவே ஒப்புதல் வழங்கின. எனினும் செயல்பாட்டுக்கு வர வேண்டுமெனில் 55 சதவீத பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்துக்குக் காரணமாக உள்ள நாடுகளும், ஒப்பந்தத்தை ஏற்க வேண்டும்.
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் அதிகரிப்பு: வீரர்கள் குவிப்பு
இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர், பஞ்சாபில் எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.தரைப்படை, விமானப்படை, கடற்படைத் தளங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட் டுள்ளன. எல்லைப் பகுதிகளில் ராணுவ வீரர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த 18-ம் தேதி காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நேற்றுமுன்தினம் அதிரடியாக புகுந்த இந்திய வீரர்கள், 7 தீவிரவாத முகாம்களை அழித்தனர்.
இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்தியாவின் தாக்குதலால் அதிர்ச்சியடைந்துள்ள பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் எல்லைப் பகுதி களில் சண்டை நிறுத்தத்தை மீறி அவ்வப்போது பீரங்கி தாக்குதல் களை நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்தியா :
இந்திய - பாக்., எல்லைப் பகுதிகளை ஆய்வு செய்தார் ராஜ்நாத்
இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார்.முன்னதாக புதன்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய ராணுவ வீரர்கள் வான்வழியாக தரையிறங்கி துல்லிய தாக்குதலை நடத்தினர். இதில் 7 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.இந்தத் தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வெள்ளிக்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வுச் செய்தார்.இது தொடர்பாக ராணுவத் தரப்பிலிருந்து கூறும்போது, "இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் எல்லையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.
மும்பை கப்பல் கட்டுமான நிறுவனத்தில் ராஜேந்திர சோழன் படம் திறப்பு
மும்பையில் உள்ள அரசு கப்பல் கட்டுமான நிறுவனத்தில் பேரரசர் ராஜேந்திர சோழனின் உருவப் படம் நேற்று திறந்து வைக்கப் பட்டது.
ராஜேந்திர சோழன் புத்தாயிரம் கொண்டாட்ட குழுவின் சார்பில் மத்திய அரசு உதவியுடன் மும்பையில் உள்ள மஸாகான் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் ராஜேந்திர சோழனின் உருவப் படத்தை திறக்கும் விழா நேற்று நடைபெற்றது.
இதில் ராஜேந்திர சோழனின் உருவப் படத்தை மகாராஷ்டிரா ஆளுநர் வித்யா சாகர் ராவ், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் திறந்துவைத்தனர்.பின்னர் பேசிய ஆளுநர் வித்யாசாகர் ராவ், ‘ராஜேந்திர சோழனின் சிறப்புகள், வெற்றிகள் குறித்து எடுத்துக் கூறினார்.
முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேசியபோது, 1000 ஆண்டுகளுக்கு முன்னரே கடல்வழி பாதுகாப்பு குறித்து ராஜேந்திர சோழன் அறிந்திருந்து, நமக்கு முன்னுதாரணமாக செயல்பட்டுள்ளார்’ என்று குறிப் பிட்டார்.
தமிழ்நாடு : 
சென்னையில் 86 வார்டுகளுக்கு திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
சென்னை மாநகராட்சித் தேர்தலில் 86 வார்டுகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் நேற்று அறிவித்தார்.
இதன்படி 200 வார்டுகள் கொண்ட சென்னை மாநகராட்சியில் இதுவரை 182 வார்டுகளுக்கான வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது.
கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு சென்னை தெற்கு மாவட்டத்தில் 128, 165, 175, 195, சென்னை மேற்கு மாவட்டத்தில் 91, 106, 135, சென்னை வடக்கு மாவட்டத்தில் 25, 39, 47, 52 என 11 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.35, 55, 61, 72, 77, 79, 96 ஆகிய 7 வார்டுகளுக்கான வேட்பாளர்கள் பிறகு அறிவிக்கப்படுவார்கள் என திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு :
ஹாக்கியில் இந்திய அணி பட்டம் வென்றது
18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை ஹாக்கியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
டாக்காவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இதன் மூலம் இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் வங்கதேசத்திடம் அடைந்த தோல்விக்கு இந்திய அணி பழிதீர்த்துக்கொண்டது.
முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்தன.2-வது பாதி ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இந்திய அணி மேலும் இரு கோல்கள் அடித்தது. ஆனால் அடுத்த 13 நிமிடங்களில் வங்கதேச அணி 3-3 சமநிலையை எட்டியது.
அடுத்தடுத்த நிமிடங்களில் இரு அணிகள் தரப்பிலும் மேலும் தலா ஒரு கோல்கள் அடிக்கப்பட ஆட்டம் 4-4 என பரபரப்பானது. ஆட்டம் முடிவடைய 20 விநாடிகள் மட்டுமே இருந்த நிலையில் இந்திய அணி 5-வது கோலை அடித்து வாகை சூடியது.
ஐஎஸ்எல் கால்பந்து இன்று தொடக்கம்
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 3-வது சீசன் போட்டிகள் அசாம் மாநிலம் குவாஹாட்டியில் உள்ள இந்திரா காந்தி தடகள மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
இந்த தொடரில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்சி, அட்லெடிகோ டி கொல்கத்தா, டெல்லி டைனமோஸ், கோவா எப்.சி, கேரளா பிளாஸ்டர்ஸ், புனே சிட்டி, மும்பை சிட்டி, நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன.8 அணிகளும் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மோத வேண்டும். ஒவ்வொரு அணிகளும் 14 லீக் ஆட்டங்களில் மோதுகின்றன.
லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.அரை இறுதி ஆட்டங்கள் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. டிசம்பர் 10, 11-ம் தேதிகளில் முதல் கட்டமும், 12, 13-ம் தேதிகளில் இரண்டாவது கட்ட அரை இறுதி ஆட்டங்களும் நடத்தப்படுகிறது.


வர்த்தகம் :
காக்னிஸன்ட் தலைவர் ராஜிநாமா
முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிஸன்ட் டெக்னா லஜி சொல்யூஷன்ஸ் (சிடிஎஸ்) நிறுவனத்தின் தலைவர் கோர்டன் கோபுர்ன் ராஜிநாமா செய்துள்ளார்.
இவருக்குப் பதிலாக ராஜீவ் மேத்தா இப்பொறுப்புக்கு நியமிக் கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நியூஜெர்சியை தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் சிடிஎஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் 2012-ம் ஆண்டில் தலைவராக பொறுப்பேற்றார் கோபுர்ன்.
இதற்கு முன்பு இந்நிறுவனத்தில் இவர் தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றி வந்தார்.தற்போது தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மேத்தா இந்நிறுவனத்தின் ஐடி சேவைகள் பிரிவின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஐடி சர்வீசஸ் பிரிவின் தலைவராக தேபஷிஸ் சாட்டர்ஜி நியமிக்கப் பட்டுள்ளார்.
திட்டமிட்டபடி ஜிஎஸ்டி-யை அமல்படுத்துவதில் அரசு உறுதி: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தீவிரம்
மத்திய அரசு திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறையை அமல்படுத்து வதில் தீவிரமாக உள்ளது.
ஜிஎஸ்டி-யை அமல்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்ட ஜிஎஸ்டி கவுன் சிலின் முதலாவது கூட்டம் மிகவும் சுமூகமாக நடைபெற்றதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
ஜிஎஸ்டி-யை அமல்படுத்துவது தொடர்பாக நாடாளுமன்ற ஆலோ சனைக் குழுவின் கூட்டத்தில் பேசிய ஜேட்லி, ஜிஎஸ்டி-யை அமல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்றார்.
செப்டம்பர் 16, 2017- அன்று அரசியல் சாசன (101-வது பிரிவு) சட்டம் 2016 அமல்படுத்தப்பட்டு ஓராண்டாகி செயல்முறைக்கு வரும். இதன்படி மத்திய அரசுக்கு உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் வரி விதிக்கும் அதிகாரம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இதைப்போல அரசியல் சாசன அமலாக்க சட்டம் மாநில அரசுகளும் செப்டம்பர் 16, வரையில் மதிப்பு கூட்டு வரி (வாட்) அல்லது விற்பனை வரி விதிக்கும் அதிகாரத்தை பெற்றிருக்கும்.

No comments: