Thursday 1 September 2016

Daily Current Affairs For Competitive Exams(Tamil) - 1st September

உலகம் :
இலங்கை பிரதமருடன் பான் கீ மூன் சந்திப்பு
இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை .நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.


இலங்கைக்கு 3 நாள்கள் சுற்றுப்பயணமாக புதன்கிழமை வந்த பான் கீ மூன், கொழும்பில் ரணில் விக்ரமசிங்கேவுடன் தனியாக பேச்சு நடத்தினார்.
அமைதி, நல்லிணக்கம், மறுகட்டமைப்பு தொடர்பான விவகாரம் குறித்து இருவரும் பேசியிருக்க வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.
கொழும்பில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனாவை வியாழக்கிழமை அவர் சந்திக்கவுள்ளார். இதேபோல், போரினால் பாதிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கியிருக்கும் முகாமுக்கு அவர் வெள்ளிக்கிழமை செல்ல திட்டமிட்டுள்ளார்.
இலங்கையில் கடந்த 7 ஆண்டுகளில் பான் கீ மூன் சுற்றுப்பயணம் செய்வது இது 2-ஆவது முறையாகும். இதற்கு முன்பு கடந்த 2009-ஆம் ஆண்டில் வந்திருந்தார்.
ராணுவத் தளவாட பகிர்வு ஒப்பந்தம்: இந்தியா - அமெரிக்கா கையெழுத்து
இந்தியா - அமெரிக்கா இடையே பாதுகாப்புத் துறை முக்கியத்துவம் வாய்ந்த ராணுவத் தளவாட பகிர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அமெரிக்கா சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டரை வாஷிங்டனில் செவ்வாய்க்கிழமை சந்தித்தார். அப்போது இந்த ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர்.
இதன் மூலம் இரு நாட்டு ராணுவங்களும் ஒருவர் மற்றொருவருடைய ராணுவத் தளங்களையும், தளவாடங்களையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதுதவிர இரு நாட்டு ராணுவங்களும் உண்வு, தண்ணீர், பெட்ரோலியப் பொருள்கள், உடை, மருத்துவ சேவை, உதிரி பாகங்கள், பழுதுபார்ப்பு உள்ளிட்ட சேவைகள், ராணுவப் பயிற்சி உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்ளவும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்துள்ளது.
இந்தியா :
மீண்டும் வெளியாகும் "நேஷனல் ஹெரால்டு' ஆசிரியராக நீலப் மிஸ்ரா நியமனம்
காங்கிரஸ் கட்சியின் பத்திரிகையான "நேஷனல் ஹெரால்டு' நாளிதழ் மீண்டும் வெளியாகவுள்ளது.
அந்தப் பத்திரிகையின் ஆசிரியராக மூத்த பத்திரிகையாளர் நீலப் மிஸ்ராவை அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனம் புதன்கிழமை நியமித்தது.
இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும், அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநருமான மோதிலால் வோரா, தில்லியில் கூறியதாவது:
நேஷனல் ஹெரால்டு (ஆங்கிலம்), நவஜீவன் (ஹிந்தி) பத்திரிகைகள் விரைவில் வெளியாகவுள்ளன. இந்தப் பத்திரிகைகளின் ஆசிரியராக மூத்த பத்திரிகையாளர் நீலப் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பத்திரிகைகள், அடுத்து வரும் மாதங்களில் வெளிவரும். அதைத் தொடர்ந்து "குவாமி ஆவாஸ்' பத்திரிகையைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
என்எஸ்ஜியில் இந்தியா உறுப்பினராவதற்கு தீவிர முயற்சி: அமெரிக்கா உறுதி
அணு சக்தி விநியோகக் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தியா - அமெரிக்கா இடையேயான ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தை தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி ஆகியோர் கலந்துகொண்டனர். இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் நீடித்து வரும் உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக அப்போது விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பாக இந்தியா மற்றும் அமெரிக்கா சார்பில் கூட்டறிக்கை ஒன்று புதன்கிழமை வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு :
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் சரி செய்யும் பணிகள் முடிக்கப்பட்டு, வரும் செப்டம்பர் 1-இல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இன்று நெல்லை மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் வெளியிட்டார். அதன்படி, நெல்லை மாவட்டத்தின் மொத்த வாக்காளர்கள் - 24,66,875 பேர்.
ஆண் வாக்காளர் - 12,16,280 பேர். பெண் வாக்காளர்கள் -  12,50,533 பேர். மற்றவர்கள் - 62 பேர்.
ரோசய்யா பதவிக் காலம் நிறைவு: தமிழக ஆளுநராக வித்யாசாகர் ராவுக்கு கூடுதல் பொறுப்பு
தமிழக ஆளுநராக சென்னமனேனி வித்யாசாகர் ராவை நியமித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிர ஆளுநராகப் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவுக்கு இந்தப் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநராக இருந்த கே.ரோசய்யாவின் பதவிக் காலம், கடந்த செவ்வாய்க்கிழமையுடன் (ஆக.30) நிறைவடைந்த நிலையில், இந்த புதிய அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர முன்னாள் முதல்வரான ரோசய்யாவை தமிழகத்தின் ஆளுநராக கடந்த 2011-ஆம் ஆண்டில் முந்தைய மத்திய காங்கிரஸ் அரசு நியமித்தது. கடந்த 5 ஆண்டுகளாக தமிழக அரசுடன் சுமுகமான உறவுடன் செயல்பட்டு வந்ததால், ரோசய்யாவின் பதவிக் காலம் மேலும் இரு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
விளையாட்டு :
அமெரிக்க ஓபன்: லியாண்டர் பயஸ், ரோஹன் போபண்ணா, சானியா மிர்சா வெற்றி!
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், ரோஹன் போபண்ணா, சானியா மிர்சா ஆகியோர் அவரவர் இரட்டையர் போட்டிகளில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்கள்.
கலப்பு இரட்டையர் போட்டியில் லியாண்டர் பயஸ் - மார்டினா ஹிங்கிஸ் ஜோடி, 6-3, 6-2 என்கிற நேர் செட்களில் சாச்சியா - ஃபிரான்சஸ் ஜோடியைத் தோற்கடித்தது.
ஆடவர் இரட்டைர் போட்டியில் ரோஹன் போபண்ணா - ஃபிரெட்ரிக் ஜோடி, 6-3, 6-7 (3), 6-3 என்ற செட் கணக்கில் ஸ்டபனிக் - நெனாட் ஜோடியைத் தோற்கடித்தது.
மகளிர் இரட்டையர் போட்டியில் சானியா மிர்சா - பார்போரா ஸ்டிரைக்கோ ஜோடி, 6-2, 6-3 என்கிற நேர் செட்களில் ஜடா மியி - எனா ஷிபாஹரா ஜோடியைத் தோற்கடித்தது.
அமெரிக்க ஓபன்: இரண்டாவது சுற்றில் முர்ரே, செரீனா
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே, அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல்சுற்று ஆட்டத்தில் செக். குடியரசின் லுகாஸ் ரோúஸாலை எதிர்கொண்டார், ரியோ ஒலிம்பிக் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற ஆன்டி முர்ரே. இருவருக்கும் இடையே 1 மணி நேரம் 51 நிமிடங்கள் நடைபெற்ற ஆட்டத்தில் 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் முர்ரே வென்றார்.
ஜப்பான் வீரர் கெய் நிஷிகோரி, தனது முதல் சுற்றில் ஜெர்மனியின் பெஞ்சமின் பெக்கரை எதிர்கொண்டார். 2 மணி நேரம் 10 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில், 6-1, 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் நிஷிகோரி வென்றார்.
வர்த்தகம் :
2,500 கோடி ரூபாய்க்கு டென் ஸ்போர்ட்ஸ் சானல்களைக் கையகப்படுத்திய சோனி நிறுவனம்!
ஜீ நிறுவனத்தின் விளையாட்டு சானல்களை சோனி நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.
TEN 1, TEN 1 HD, TEN 2, TEN 3, TEN Golf HD, TEN Cricket, TEN Sports ஆகிய ஜீ நிறுவனத்தின் விளையாட்டு சானல்களை 2,578 கோடி ரூபாய்க்குத் (385 மில்லியன் டாலர்) தன்வசப்படுத்தியுள்ளது சோனி நிறுவனம்.
தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, மேற்கு இந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே ஆகிய நாடுகளின் கிரிக்கெட் உரிமத்தை வைத்துள்ளது டென் ஸ்போர்ட்ஸ் நிறுவனம். சோனியும் ஐபிஎல் உள்ளிட்ட ஏராளமான விளையாட்டுப் போட்டிகளுக்கான உரிமங்களைக் கொண்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ சேவையில் "டேட்டா" அல்லது "வாய்ஸ் கால்" இரண்டில் ஒன்றிற்கு மட்டும் கட்டணம் செலுத்தும் புதிய முறை அறிமுகம்
ரிலையன்ஸ் ஜியோ சேவை இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுஇந்தியாவில் செல்லிடப்பேசி மூலம் இணைய சேவை பெறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி சுமார் 32 கோடி. இந்தியாவில் இந்த மொபைல் இன்டர்நெட் சேவையை மொத்தம் 138 நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

அதில் பார்தி ஏர்டெல் 9.5 கோடி வாடிக்கையாளர்களுடன் முதலிடத்தில் உள்ளது. வோடஃபோன் நிறுவனம் 6.7 கோடி, ஐடியா நிறுவனம் 4.4 கோடி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் 3.9 கோடி, பி.எஸ்.என்.எல். 3.4 கோடி, ஏர்செல் 2.2 கோடி, டாடா 2.1 கோடி, டெலிநார் 1.3 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளன. எம்டிஎஸ், எம்டிஎன்எல், விடியோகான் ஆகிய நிறுவனங்கள் கிட்டத்தட்ட 20 லட்சம் வரையிலான வாடிக்கையாளர்களையும், பிற நிறுவனங்கள் 10 லட்சத்துக்கும் குறைவான வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளன.

No comments: