Friday 23 September 2016

Daily Current Affairs For Competitive Exam - 24th September Review

உலகம் :

ஜப்பானில் ரிக்டர் 6.4 நிலநடுக்கம்: சேதும் ஏதும் இல்லை
கிழக்கு ஜப்பானின் கடற்கரை பகுதியில் நேற்று கடும் நில நடுக்கம் ஏற்பட்டது.


இது தொடர்பாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், “காலை 9.14 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.4 ரிக்டர் ஆக பதிவாகியது. கத்சுரா நகருக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 150 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் ஜப்பான் புவியியல் ஆய்வும் மையம், “இந்த நிலநடுக் கம் 6.5 ரிக்டர் செரிவு கொண்டதாக இருந்தது” என்று கூறியுள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்தியா :
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: இறுதி செய்தது இந்தியா - பிரான்ஸ்
36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இந்தியாவும், பிரான்ஸும் இறுதி செய்துள்ளது.
இதன்படி, 36 ரஃபேல் ரக போர் விமானங்கள், ஆயுதங்கள், உதிரிபாகங்கள், ஆதரவு மற்றும் பராமரிப்பு ஆகியவையும் ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்கள் ஆகும்.
இருநாட்டு அரசுகளுக்கு இடையேயான இந்த ஒப்பந்தத்தினால் இந்தியாவுக்கு 7.87 பில்லியன் யூரோக்கள் (சுமார் ரூ.37,000 கோடி) செலவு என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் ஹவுசில் மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர், பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ழான் யுவேஸ் லி டிரையன் ஆகியோரிடையே ஒப்பந்தம் இறுதி வடிவத்தில் கையெழுத்தானது.
அமெரிக்காவுக்கான தூதராக நவ்தேஜ் சிங் சர்னா நியமனம்
அமெரிக்காவுக்கான இந்தியாவின் புதிய தூதராக, நவ்தேஜ் சிங் சர்னா நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது பிரிட்டனுக்கான இந்திய தூதராக உள்ள இவர், விரைவில் புதிய பொறுப்பை ஏற்பார் என, வெளியுறவு விவகாரங்கள் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 1980-ம் ஆண்டு ஐஎஃப்எஸ் பிரிவைச் சேர்ந்த நவ்தேஜ் சிங், பிரிட்டனில் தூதரகப் பணிக்குச் செல்லும் முன், வெளியுறவு அமைச்சகத்தில் செயலாளராக (மேற்கு) பணிபுரிந்தார். 2002 முதல் 2008 வரை வெளியுறவு செய்தித் தொடர்பாளராக இருந்தார்.
கடந்த 2008 முதல் 2012-ம் ஆண்டு வரை, இஸ்ரேலுக்கான இந்திய தூதராகவும், நவ்தேஜ் சிங் பணி புரிந்துள்ளார்.
அமெரிக்காவுக்கான இந்திய தூதராக அருண் சிங் தற்போது பொறுப்பு வகிக்கிறார். அதிபர் தேர்தலுக்கு அமெரிக்கா தயாராகி வரும் நிலையில், அந்நாட்டுக்கான புதிய தூதராக நவ்தேஜ் சிங் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு : 
50 பொது இடங்களில் இலவச வைஃபை வசதி: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
 தமிழகத்தில் பெரிய பஸ் நிலையங்கள், பூங்காக்கள் போன்ற 50 இடங்களில் ’அம்மா வைஃபை மண்டலம்’, 50 பள்ளிகளில் இலவச வைஃபை வசதி மற்றும் இ-சேவை மையங்களில் ஆதார் பதிவு செய்யும் வசதிகள் ஏற்படுத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:தகவல் தொழில்நுட்பத்தின் பயன் அனைவரையும் சென்றடைய பல்வேறு புதிய திட்டங்கள் அரசு சார்பில் செயல்படுத்தப்படுகின்றன.தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டுக்காக சென்னை டைடல் பார்க் முதல் தளத்தில் 6 ஆயிரத்து 860 சதுரடியில் 90 இருக்கை வசதி கொண்ட தொழில்முனைவோர் மையம் நிறுவப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் 2-ம் நிலை நகரங்களில் உருவாக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காக்களில் இந்த மையங்கள் ஏற்படுத்தப்படும். இதன்படி இந்தாண்டு கோவை டைடல் பார்க்கில் வாடகைக் கட்டிடத்தில் ரூ.2 கோடி முதலீட்டில் 50 இருக்கைகளுடன் கூடிய தொழில் முனைவோர் மையம் அமைக்கப்படும். இம்மையத்துக்கு நாஸ்காம் நிறுவனம் அறிவுசார் பங்குதாரராக செயல்படும்.
8 செயற்கைக்கோள்களுடன் செப். 26-ல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-35 ராக்கெட்
ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து செப்டம்பர் 26-ம் தேதி 8 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-35 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது.ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து செப்டம்பர் 26-ம் தேதி (திங்கள்கிழமை) காலை 9.12 மணிக்கு பிஎஸ்எல்வி சி-35 ராக்கெட் ஏவப்படுகிறது.
அதில் பருவநிலை தொடர்பான ஆய்வுக்காக 371 கிலோ எடை கொண்ட ‘ஸ்காட்சாட்-1' என்ற செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது.
வானிலை முன்னறிவிப்பு குறித்த தகவல்களை இந்த செயற்கைக்கோள் மூலம் பெற இயலும். இந்த செயற்கைக் கோள் பூமியில் இருந்து 720 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
விளையாட்டு :
வில்லியம்சன், லாதம் அபாரம்: மழையால் நிறுத்தப்பட்ட 2-ம் நாள் ஆட்டத்தில் நியூஸி. 152/1
கான்பூர் டெஸ்ட் 2-ம் நாள் ஆட்டம் மழை காரணமாக தேநீர் இடைவேளைக்குப் பிறகு கைவிடப்பட்டது. நியூஸிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்துள்ளது. 
கேப்டன் கேன் வில்லியம்சன் 65 ரன்களுடனும், தொடக்க இடது கை வீரர் டாம் லாதம் 56 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 
இன்று இன்னமும் 34 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் தேநீர் இடைவேளையின் போது கனமழை பெய்ததால் மைதானம் விளையாட ஏற்றதாக இல்லை என்று முடிக்கப்பட்டது. நாளை 3-ம் நாள் ஆட்டம் 9.15-க்கு தொடங்குகிறது, இதனால் 98 ஓவர்களை நாளை வீச முடிவெடுக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம் :
ஆண்டு வர்த்தகம் ரூ.20 லட்சம் வரையிலான வர்த்தகர்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை (ஜிஎஸ்டி) அமல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வரு கிறது. டெல்லியில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில் ஆண்டு வர்த்தகம் ரூ. 20 லட்சம் வரை உள்ள வர்த்தகர்களுக்கு ஜிஎஸ்டி-யிலிருந்து விலக்கு அளிப் பதென முடிவு செய்யப்பட்டது.
வட கிழக்கு மாநிலங்களில் உள்ள வர்த்தகர்களுக்கு இது ரூ. 10 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது.
அடுத்த கூட்டம் இம்மாதம் 30-ம் தேதி நடைபெற உள்ளது. அப்போது இறுதி வரைவு அறிக்கை குறித்து முடிவு செய்யப்பட்டு எந்தெந்த பொருள்களுக்கு வரி விலக்கு அளிப்பது என்பது முடிவு செய்யப்படும். ஜிஎஸ்டி வரி எவ்வளவு என்பது அடுத்த மாதம் 17-ம் தேதி தொடங்கி மூன்று நாள் நடைபெற உள்ள கூட்டத்தில் இறுதி செய்யப்படும் என்று ஜேட்லி தெரிவித்தார்.

No comments: