Tuesday 27 September 2016

Daily Current Affairs For Competitive Exam - 27th September

உலகம் :

பருவநிலை மாற்றம்: பாரிஸ் ஒப்பந்தத்தில் இணையும் இந்திய முடிவுக்கு ஐ.நா. வரவேற்பு
பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் இணையும் இந்தியாவின் முடிவு துரித நடவடிக்கை என ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்துப் பேசிய பான் கீ மூனின் துணை செய்தித்தொடர்பாளர் ஃபர்ஹான், ''பான் கீ மூன் பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தத்தில் பெரும்பான்மையான நாடுகள் கையெழுத்திட வேண்டுமென விரும்புகிறார். இதுதொடர்பான இந்தியாவின் துரித முடிவு குறித்து மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். மேலும் அவர் ஒப்பந்தம் தொடர்பாக முறையான முடிவுகளை இந்தியா விரைவில் எடுக்கும் என எதிர்பாக்கிறார்'' என்று கூறியுள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் நடைபெற்ற பாஜகவின் தேசியக் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்துக்கு காந்தி பிறந்த நாளான வரும் 2-ம் தேதி இந்தியா ஒப்புதல் வழங்கும் என்று தெரிவித்திருந்தார்.
இந்தியா :
மாநிலங்களவையின் ஒரு இடத்துக்கு அடுத்த மாதம் 7-ம் தேதி தேர்தல்: முன்னாள் மத்திய அமைச்சர் ஷாநவாஸ் உசேனுக்கு வாய்ப்பு
கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்ற மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், சிறு பான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் நஜ்மா ஹெப்துல்லா. இவர், மத்தியப் பிரதேச மாநிலத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.
சமீபத்தில் இவர் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப் பட்டார். இதையடுத்து, நஜ்மா தனது மத்திய அமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி ராஜினாமா செய்தார். இதனால் மாநிலங்களவையில் ஒரு இடம் காலியானது.
காலியாக உள்ள இந்த இடத் துக்கு வரும் அக்டோபர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறும் என மத்திய தேர்தல் ஆணையம் அறி வித்துள்ளது. இந்த இடம் பாஜக வின் தேசிய செய்தி தொடர் பாளர்களில் ஒருவரான ஷாநவாஸ் உசேனுக்கு வழங்கப்படும் எனத் தெரிகிறது. பிஹாரைச் சேர்ந்த உசேன் முன்னாள் மத்திய அமைச்ச ராக இருந்தவர். அவ்வாறு தேர்ந் தெடுக்கப்பட்டால் 2018-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி வரையில் இந்தப் பதவியில் இருக்கலாம்.
கர்நாடக அமைச்சராக கே.ஜே.ஜார்ஜ் மீண்டும் பதவியேற்பு
கர்நாடக முதல்வர் சித்தராமையா அமைச்சரவை யில் உள்துறை அமைச்ச ராக பதவி வகித்தவர் கே.ஜே.ஜார்ஜ். பெங்க ளூருவில் தொடர்ச்சியாக நடந்த பாலியல் பலாத்கார சம்பவங்கள், ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவியின் மர்ம மரணம் உள்ளிட்ட பிரச்சினைகளில் சிக்கியதால், ஜார்ஜ் உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இந்த சூழலில், கடந்த ஜூலை 18-ம் தேதி சிக்மகளூரு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்த துணை கண்காணிப்பாளர் கணபதி திடீரென தற்கொலை செய்து கொண்டார். மேலும் தனது மரணத்துக்கு அமைச்சர் ஜார்ஜ் தான் காரணம் என வீடியோவில் அவர் பதிவு செய்தார். இந்த விவகாரத்தில் அமைச்சர் பதவியில் இருந்து ஜார்ஜ் விலகினார்.
வெற்றிகரமாக 2 ஆண்டுகள் நிறைவு: செவ்வாய் கிரக தரவுப் பொக்கிஷம் ஆனது மங்கள்யான்!
விண்வெளி அறிவியலில் இந்தியாவை தலைநிமிரச் செய்த செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வரும் மங்கள்யான் செயற்கைக் கோள் தனது 2-வது ஆண்டை நிறைவு செய்துள்ளது.
மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் (MOM) என்று அழைக்கப்படும் இது விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் மிகப்பெரிய மைல்கல் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ செவ்வாயைச் சுற்றிவரும் செயற்கைக் கோள் அளித்த செப்டம்பர் 2015 வரையிலான தரவுகளை வெளியிட்டுள்ளது.
இது குறித்து இஸ்ரோ தெரிவிக்கும் போது, “மீதமுள்ள தரவுகள் 6 மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும். கிரக ஆராய்ச்சியில் இதுதான் வழக்கம். செப்டம்பர் 24, 2016-ல் மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் தனது 2 ஆண்டுகளை முடித்துள்ளது. மங்கள்யான் செயற்கைக் கோள் அனுப்பப்பட்டதற்கான தேவைகளை பூர்த்தி செய்துள்ளது. அது நல்ல நிலையில் உள்ளதால் மேலும் தரவுகளை நமக்கு அளிக்கும்” என்று கூறியுள்ளது.
தமிழ்நாடு : 
ஓபிசி வகுப்பினருக்கு வங்கித் தேர்வுக்கு இலவச பயிற்சி: சென்னை, திருச்சியில் 3 நாட்கள் நடக்கிறது
வங்கி அதிகாரி, எழுத்தர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கம், எம்பவர் அறக்கட்டளை, பெரியார் ஐஏஎஸ் அகாடமி சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதற்கான பயிற்சி வகுப்புகள் சென்னையிலும், திருச்சியிலும் 3 நாட்கள் நடைபெறும். சென்னையில் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் அக்டோபர் 7 முதல் 9-ம் தேதி வரையும், திருச்சியில் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியில் அக்டோபர் 13 முதல் 15 வரையும் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்படும்.
8 செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்: பிஎஸ்எல்வி சி35 புதிய சாதனை- இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 8 செயற்கைக் கோள்கள், பிஎஸ்எல்வி சி35 ராக்கெட் மூலம் இருவேறு சுற்றுப்பாதைகளில் நேற்று வெற்றிகரமாக நிலைநிறுத் தப்பட்டன. இதன்மூலம் இஸ்ரோ புதிய சாதனை படைத்துள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித் துள்ளார்.
நம் நாட்டின் சொந்த தேவைகளுக்காக மட்டுமின்றி, வணிகரீதியாகவும் செயற்கைக் கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் செலுத்தி வருகிறது. இந்த வரிசையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 8 செயற்கைக் கோள்கள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி - சி35 ராக்கெட் மூலம் நேற்று காலை 9.12 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
விளையாட்டு :
டென்னிஸ் தரவரிசைப் பட்டியல்: சானியா மிர்சா தொடர்ந்து முதலிடம்
டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார்.
டோக்கியோவில் சமீபத்தில் நடந்த பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா - பார்பரா ஸ்டிரைகோவா ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றியின் மூலம் இரட்டையர் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் சானியா மிர்சா தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார். அவர் மொத்தம் 9,730 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் மார்டினா ஹிங்கிஸ் 9,725 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சாகேத் மைனேனி 138-வது இடத்தில் இருக்கிறார். இந்தப் பட்டியலில் ராம்குமார் ராமநாதன் 229-வது இடத்திலும், யூகி பம்பரி 282-வது இடத்திலும் உள்ளனர்.
வுஹான் ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் பெட்ரா
சீனாவில் உள்ள வுஹான் நகரில், வுஹான் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடந்த முதல் சுற்று போட்டியில் செக் வீராங்கனையான பெட்ரா விட்டோவா, லாத்வியாவின் ஜெலினா ஒஸ்டாபென்கோவை எதிர்த்து ஆடினார். இப்போட்டியில் விட்டோவா, 6-3, 6-1 என்ற நேர் செட்களில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனையான கோண்டா, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் அன்னிகா பெக்கை வீழ்த்தினார்.
வர்த்தகம் :
எஸ்பிஐயுடன் இணைப்பு: ரிசர்வ் வங்கியிடம் விரைவில் அறிக்கை அளிக்கப்படும்- துணை வங்கிகள் அறிவிப்பு
பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகள் விரைவில் ரிசர்வ் வங்கியிடம் இணைப்பு நடவடிக்கை குறித்த அறிக்கையை அளிக்க உள்ளன. இணைப்பு நடவடிக்கைக்கு துணை வங்கி களின் பங்குதாரர்கள் இசைவு தெரிவித்துள்ளதன் அடிப்படை யில் இந்த அறிக்கையை எஸ்பிஐயின் துணை வங்கிகள் அளிக்க உள்ளன.
வங்கி இணைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பங்குதாரர்களின் ஆட்சேபனைகள் மற்றும் குறைகளைக் கேட்பதற்கு அமைக்கப்பட்ட வல்லுநர்கள் குழுவின் ஆலோசனைகளை இயக்குநர்கள் குழு பரிசீலித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக குறைதீர்ப்பு முறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று ஸ்டேட் பேங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர் வங்கி நேற்று பங்குச் சந்தைக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
எந்த மாற்றங்களும் இல்லாமல் கையகப்படுத்த இந்த வங்கியின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. வங்கியின் வல்லுநர்கள் குழு இந்த இணைப்பு குறித்து அளித்துள்ள அறிக்கையை ரிசர்வ் வங்கியின் அனுமதிக்காக விரைவில் அனுப்ப உள்ளதாக கூறியுள்ளது. இது தொடர்பாக இதர துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் வங்கிகளும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
ஜிஎஸ்டி-யின் கீழ் பதிவு செய்ய வரைவு விதிமுறை அறிக்கை வெளியீடு
நிறுவனங்கள் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பின் கீழ் பதிவு செய்வதற்கான வரைவு விதிமுறை அறிக்கையை வரித்துறையினர் வெளியிட்டனர். ஜிஎஸ்டி கவுன்சிலின் முதலாவது கூட்டம் நடந்து முடிந்த ஒரு வார காலத்திற்குள்ளாகவே வரைவு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பதிவு செய்வது, இன்வாய்ஸ் மற்றும் வரி செலுத்துவதற்கான வரைவு விதிமுறை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மத்திய உற்பத்தி வரி மற்றும் சுங்கவரி வாரியம் (சிபிஇசி) இதை வெளியிட்டு இது தொடர்பான கருத்துகளை புதன்கிழமைக்குள் தெரிவிக்கும்படி குறிப்பிட்டுள்ளது.
இந்த வரைவு விதிமுறை அறிக்கையின்படி ஆன்லைனில் மூன்று நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். இந்தியர்கள் அல்லாத நிறுவனங்கள் 5 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். அத்துடன் செலுத்த வேண்டிய வரித் தொகை முழுவதையும் முன்னதாகவே (அட்வான்ஸ்) செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: