Wednesday 14 September 2016

Daily Current Affairs For Competitive Exam - 15th September

உலகம் :

அமெரிக்கா: இந்திய வம்சாவளி விஞ்ஞானிக்கு கெளரவம்
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி ரமேஷ் ராஸ்கர் (46) கெளரவம் மிக்க லெமெல்ஸன்-எம்ஐடி பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


5 லட்சம் டாலர் (சுமார் ரூ.3.34 கோடி) மதிப்பிலான இந்தப் பரிசு, அமெரிக்காவின் மிகச் சிறந்த புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் பிறந்த ரமேஷ் ராஸ்கர், மாஸசூஸஸ்ட் தொழில்நுட்பப் பயிற்சி மையத்தின் பல்துறை ஆய்வகத்தில் "கேமரா கலாசார' ஆய்வுக் குழுவின் நிறுவனர் ஆவார்.
ஊடகக் கலை மற்றும் அறிவியல் விரிவுரையாளராகவும் அவர் பணியாற்றி வருகிறார்.
அவரது திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடிய கண்டுபிடிப்புகள், இளைஞர்கள் முன்னேற்றதுக்காக ஆற்றி வரும் பணிகள் ஆகியவை காரணமாக அவருக்கு லெமெல்ஸன்-எம்ஐடி பரிசு வழங்கப்படுவதாக அந்தப் பரிசுகளை வழங்கும் மாஸசூஸஸ்ட் தொழில்நுட்பப் பயிற்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"மெரான்டி' புயலால் ஸ்தம்பித்தது தைவான் : இந்த ஆண்டின் மிகக் கடுமையான புயல் என்று அறிவிப்பு
தைவானில் கடுமையாக வீசிய "மெரான்டி' புயல் காரணமாக அந்த நாட்டின் ஒரு பகுதி புதன்கிழமை ஸ்தம்பித்தது.
உலகில் இந்த ஆண்டு வீசியதிலேயே மிகவும் கடுமையானது என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் புயலால், அந்தத் தீவின் தெற்குப் பகுதியில் மின்சாரம் தடைபட்டு 1.8 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின.
"மெரான்டி' புயல் கரையைக் கடக்காத நிலையிலும், இதுவரை இல்லாத வேகத்தில் வீசிய சூறைக் காற்றாலும், கனமழையாலும் நாட்டின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்திய நேரப்படி புதன்கிழமை காலை 7.45 மணிக்கு தெவானின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஹெங்சன் நகரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் "மெரான்டி' புயல் மையம் கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியா :
பயங்கரவாதத்துக்கு ஆதரவான போக்கு இந்தியா, ஆப்கன் கடும் கண்டனம்
அரசியல் சுய ஆதாயத்துக்காக தெற்காசிய பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை ஆதரித்து வரும் போக்கு நிறுத்தப்பட வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா, ஆப்கானிஸ்தான் நாடுகள் மறைமுகமாக எச்சரித்துள்ளன.
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷரஃப் கனி அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். இதையொட்டி, தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை அவர் புதன்கிழமை சந்தித்தார்.
இரு நாடுகளைச் சேர்ந்த உயர்நிலைக் குழு உறுப்பினர்களும் இந்தச் சந்திப்பின்போது உடனிருந்தனர். அப்போது, தெற்காசிய பிராந்தியத்தில் நிலவி வரும் அரசியல் சூழல், இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தக உறவுகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வனவாசிகளின் நலன் காக்க புதிய சட்டம்: மத்திய அமைச்சர்
வனங்களில் வசித்து வருபவர்களின் நலன்களைக் காக்க புதிய வனச் சட்டம் தேவை என்று மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் அனில் மாதவ் தவே வலியுறுத்தியுள்ளார்.
தில்லியில் இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியதாவது: புதியனவற்றைக் கண்டுபிடிப்பது என்பது இந்தியாவின் மரபணுவிலேயே அமைந்தது. கொள்கைகளை வகுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்தியாவை முழுமையாகப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப புதிய கொள்கைகளை வடிவமைக்க வேண்டும்.
"பிரிக்ஸ்' சுற்றுச்சூழல் அமைச்சர்கள் கோவாவில் நாளை ஆலோசனை
"பிரிக்ஸ்' அமைப்பு நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள், கோவா தலைநகர் பனாஜியில் வெள்ளிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.
இதுகுறித்து சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பருவ நிலை மாற்றம், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை, காற்று மற்றும் நீர் மாசடைதல், பல்லுயிர் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
தமிழ்நாடு :
ஒகேனக்கல்லில் நீர் வரத்து சரிவு
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து சரிந்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்தத் தண்ணீர் கடந்த சில நாள்களாக பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரத் தொடங்கியது. நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக நொடிக்கு 15,000 முதல் 16,000 கன அடி வரை வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து புதன்கிழமை காலை 13,500 கன அடியாகக் குறைந்தது. அன்றைய தினம் மாலை நிலவரப்படி இந்த நீர்வரத்து மேலும் சரிந்து 13,000 கன அடியானது.
செப்.17-ல் நாமக்கல் கம்பன் கழக விருது வழங்கும் விழா
நாமக்கல் கம்பன் கழகம் சார்பில் கம்பர் விருது வழங்கும் விழா வரும் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
சேலம் சாலை சனு இண்டர்நேஷனல் ஹோட்டலில் மாலை 5 மணிக்கு விழா நடைபெறவுள்ளது. நாமக்கல் கம்பன் கழகத் தலைவர் வி.சத்தியமூர்த்தி தலைமை வகிக்கிறார். டாக்டர் பி.செல்வராஜ், ராம.சீனிவாசன், டி.சந்திரசேகரன் முன்னிலை வகிக்கின்றனர். நாமக்கல் கம்பன் கழகச் செயலர் அரசு பரமேசுவரன் வரவேற்கிறார்.
விளையாட்டு :
உலகக் கோப்பை கபடி முதல் ஆட்டத்தில் இந்தியா-தென் கொரியா மோதல்
உலகக் கோப்பை கபடி போட்டி வரும் அக்டோபர் 7 முதல் 22 வரை ஆமதாபாதில் நடைபெறுகிறது.
முதல் ஆட்டத்தில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவும், தென் கொரியாவும் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் இந்தியா, தென் கொரியா தவிர, அமெரிக்கா, இங்கிலாந்து, ஈரான், ஆஸ்திரேலியா, போலந்து, தாய்லாந்து, வங்கதேசம், ஜப்பான், ஆர்ஜென்டீனா, கென்யா ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
வர்த்தகம் :
ரிலையன்ஸ்-ஏர்செல் இணைகிறது!
தொலை தொடர்பு துறையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் - ஏர்செல் நிறுவனங்களின் இணைப்பு நடைபெற  உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கம்பியில்லா தொலைபேசி சேவைப்பிரிவு ஏர்செல்லுடன் இணைக்கப்பட உள்ளது. 
இரண்டு நிறுவனங்களும் இணைந்து புதிதாக உருவாக்கப்பட உள்ள  நிறுவனத்தில் இரண்டு நிறுவனங்களும் தலா 50 சதவீத பங்குகளை  வைத்திருக்கும். இணைப்புக்குப் பிறகு நிறுவனங்களின் மொத்த மதிப்பு 35 ஆயிரம் கோடியாகவும், கடன் மதிப்பு 14 ஆயிரம் கோடியாகவும்  இருக்கும்.
இணைப்புக்கு பிறகு இந்த நிறுவனம் 19 கோடி பயனாளர்களுடன் இந்திய தொலை  தொடர்பு துறையின்   இரண்டாவது பெரிய நிறுவனமாக இது விளங்கும்.   25 கோடி வாடிக்கையாளர்களுடன் ஏர்டெல் முதலிடத்தில் உள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான  மறைமுக வரி வசூல் ரூ.3.36 லட்சம் கோடி
நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான கால அளவில் நாட்டின் நிகர மறைமுக வரி வசூல் 27.5 சதவீதம் அதிகரித்தது.
மறைமுக வரியின் கீழ் உற்பத்தி வரி, சேவை வரி, சுங்க வரி ஆகியவை உள்ளன. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத கால அளவில் மறைமுக வரி வசூல் ரூ.3.36 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டு இதே கால அளவு வரி வசூலுடன் ஒப்பிடுகையில் இது 27.5 சதவீதம் அதிகமாகும்.
நடப்பு நிதி ஆண்டு மறைமுக வரிக்கான பட்ஜெட் இலக்கில் ஆகஸ்ட் வரையிலான கால அளவில் 43.2 சதவீதம் எட்டப்பட்டுள்ளது.

No comments: