உலகம் :
கொழும்பு துறைமுக மேம்பாடு: இந்திய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு
இலங்கையில் கொழும்பு துறைமுகக் கட்டுமானப் பணிகளை முடிப்பதற்கும், அதனை இயக்குவதற்கும் இந்திய முதலீட்டாளர்களின் உதவியை அந்நாட்டு அரசு நாடியுள்ளது. கொழும்பு துறைமுகக் கட்டுமானப் பணிகளை முடிப்பதற்கு சீன நாட்டினர் ஆர்வம் காட்டி வரும் நிலையில் இலங்கை அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கையின் துறைமுகங்கள் துறை அமைச்சர் அர்ஜுனா ரணதுங்கா, வெளிநாட்டுப் பிரதிநிதிகள் சங்கத்தில் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
கொழும்பு துறைமுகத்துக்கு இந்தியாவில் இருந்து 60 சதவீத சரக்குப் பெட்டகங்கள் வருகின்றன.
கொழும்பு துறைமுகத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள 1,200 மீட்டர் நீளமுள்ள முனையத்தில் 430 மீட்டர் தொலைவுக்கு 8 கோடி டாலர்கள் செலவில் (சுமார் ரூ.536 கோடி) கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள பணிகளை முடிப்பதற்கு 40 கோடி டாலர்கள் (சுமார் ரூ.2,682 கோடி) தேவைப்படுகின்றன.
எனவே, இந்தப் பணிகளை முடிப்பதற்கு 20 சதவீத பங்களிப்புடன் இந்திய முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும் என்று விரும்புகிறோம் என்றார் அவர்.
நேபாள அமைச்சரவை விரிவாக்கம்
நேபாளத்தில் மேலும் 13 பேர் அமைச்சர்களாக வெள்ளிக்கிழமை பதவியேற்றனர்.
நேபாள பிரதமராக பிரசண்டா கடந்த ஆக. 4-ஆம் தேதி பதவியேற்றார். அவருடன் இரு துணைப் பிரதமர்கள் உள்ளிட்ட 6 அமைச்சர்கள் பதவியேற்றனர். பின்னர் அவரது நேபாள கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கி தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார். இதையடுத்து, தற்போது அவரது அரசுக்கு ஆதரவு அளித்து வரும் நேபாளி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 13 பேர் அமைச்சர்களாக வெள்ளிக்கிழமை பதவியேற்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த வெளியுறவுத் துறை அமைச்சராக பிரகாஷ் சரண் மஹத், பாதுகாப்புத் துறை அமைச்சராக பாலகிருஷ்ண காண்ட், நல்லிணக்கத் துறை அமைச்சராக சீதாதேவி யாதவ் உள்ளிட்டோர் பொறுப்பேற்றனர்.
இந்தியா :
புதிய அமைச்சர்களுக்கு அதிபர் வித்யாதேவி பண்டாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய கல்வி கொள்கை பரிந்துரைகள்: எங்கள் அறிக்கையை மத்திய அரசு முழுமையாக வெளியிடவில்லை- கமிட்டி தலைவர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தகவல்
புதிய கல்வி கொள்கை தொடர் பான அறிக்கை முழுமையாக வெளியிடப்படவில்லை, அதன் சாராம்சங்கள் மட்டுமே வெளி யிடப்பட்டுள்ளன என்று அதனை வரையறுத்த கமிட்டியின் தலைவர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தெரி வித்துள்ளார்.
புதிய கல்வி கொள்கையை வரையறுக்க மத்திய அமைச் சரவை முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் 5 பேர் கொண்ட கமிட்டியை மத்திய அரசு அமைத் தது. அந்த கமிட்டி கடந்த மே மாதம் தனது பரிந்துரைகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை யிடம் சமர்ப்பித்தது.
தமிழ்நாடு :
வட தமிழகத்தில் 2 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
மத்திய மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும்.
அதே போல, தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.
புதிய தலைமை வழக்குரைஞர் நியமனம்
தமிழக அரசின் தலைமை வழக்குரைஞராக (அட்வகேட் ஜெனரல்) ஆர்.முத்துகுமாரசாமியை நியமித்து, தலைமைச் செயலர் பி.ராம மோகன ராவ் வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதிமுக அரசு 2-ஆவது முறையாக பொறுப்பேற்றபோது, அரசு வழக்குரைஞர்கள் பலரும் மாற்றப்பட்டு, புதியவர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி, தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்குரைஞர்ஆர்.முத்துகுமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு :
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிக்கு இந்தியாவின் சாகேத் மைனேனி தகுதி!
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் முக்கியச் சுற்றுக்கு இந்தியாவின் சாகேத் மைனேனி தகுதி பெற்றுள்ளார்.
இன்று நடைபெற்ற தனது 3-ஆவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் செர்பியாவின் பெட்ஜா கிறிஸ்டினை எதிர்கொண்ட மைனேனி, 6-3, 6-0 என்ற நேர் செட்களில் வென்றார். இதனையடுத்து, முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் முக்கியச் சுற்றுக்கு அவர் முன்னேறியுள்ளார்.
முன்னதாக, ஆஸ்திரேலிய ஓபனில் 3-ஆவது தகுதிச்சுற்றிலும், பிரெஞ்சு ஓபனில் 2-ஆவது தகுதிச்சுற்றிலும் தோல்வியடைந்து சாகேத் மைனேனி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
முதல் சுற்றில் அவர் உலகின் 48-ம் நிலை வீரரான ஜிரி வெஸ்லியைச் சந்திக்கிறார். இதில் ஜெயிக்கும்பட்சத்தில் 2-வது சுற்றில் உலகின் நெ.1 வீரரான ஜோகோவிச்சுடன் மோத நேரிடும்.
ஒலிம்பிக் போட்டிகளுக்காக நடவடிக்கைக் குழு
டோக்கியோ ஒலிம்பிக் உள்பட, அடுத்து நடைபெறும் 3 ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் வகையில் நடவடிக்கைக் குழு அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் இதைத் தெரிவித்த பிரதமர் மோடி, அடுத்த சில நாள்களில் அந்த நடவடிக்கைக் குழு ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைக் குழுவானது, 2020 (டோக்கியோ), 2024, 2028 ஆகிய ஆண்டுகளில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்/வீராங்கனைகள் திறம்பட பங்கேற்கும் வகையிலான விரிவான செயல்திட்டத்தை உருவாக்கும்.
வர்த்தகம் :
டாடா மோட்டார்ஸ் லாபம் 57% வீழ்ச்சி
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு லாபம் 57 சதவீதம் வீழ்ச்சி கண்டது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2016-17 நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை வாயிலாக ஈட்டிய வருவாய் ரூ.66,101.27 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாயான ரூ.60,093.79 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 10 சதவீதம் அதிகமாகும்.
ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லாபம் 36% அதிகரிப்பு
பி.வி.சி. பைப் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள ஃபினோலெக்ஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு லாபம் 36.05 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2016-17 நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ஃபினோலெக்ஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ.672.86 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாயான ரூ.633.38 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 6.23 சதவீதம் அதிகமாகும்.
நிகர லாபம் ரூ.72.06 கோடியிலிருந்து 36.05 சதவீதம் அதிகரித்து ரூ.98.04 கோடியாக இருந்தது என ஃபினோலெக்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment