Monday 15 August 2016

Daily Current Affairs For Competitive Exam - 15th August

உலகம் :
சிறப்பு அலுவலகம் ஏன்?இலங்கை அதிபர் விளக்கம்
'இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின்போது காணாமல் போன, 65 ஆயிரம் பேரை கண்டுபிடிப்பதற்காக, சிறப்பு அலுவலகம் அமைக்கும் முடிவு, பாதிக்கப்பட்டோரின் குறைகளை தீர்க்கும் நோக்குடன் எடுக்கப்பட்டது,'' என, அந்த நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன


கூறியுள்ளார். கடந்த, 2009ல், இலங்கை உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது. அப்போது நடந்த சண்டையின்போது, 65 ஆயிரம் பேர் காணாமல் போனதாக புகார்கள் எழுந்தன. அவர்களை கண்டுபிடிப்பதற்காக, சிறப்பு அலுவலகம் அமைக்கப் போவதாக, அதிபர் சிறிசேன அறிவித்தார்.
ஆனால், பாதுகாப்பு படை வீரர்களை குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக, அவரது எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டினர்.
இந்தியா :
82 பேருக்கு வீர தீர விருதுகள் அறிவிப்பு: ஹங்பன் தாதாவுக்கு அசோக் சக்ரா - குடியரசுத் தலைவர் பிரணாப் ஒப்புதல்
82 ராணுவ வீரர்கள் மற்றும் துணை ராணுவப் படையினருக்கு வீர தீர விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
காஷ்மீரில் நான்கு தீவிரவாதி களுடன் போராடி, 3 பேரைக் கொன்று வீரமரணம் எய்திய ராணுவ வீரர் ஹங்பன் தாதாவுக்கு அமைதிக் காலத்தில் ராணுவ வீரருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான அசோக் சக்ரா விருது (இறப்புக்கு பின்) அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட் கிடையாது: மத்திய அரசு முடிவு
அடுத்த ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட்டை பொதுபட்ஜெட்டுடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இனிமேல் தனியாக ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது.
பிரிட்டிஷ் ஆட்சியின்போது கடந்த 1924-ம் ஆண்டில் முதல் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த பாஜக ஆட்சியின்போது ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் பல்வேறு காரணங்களால் அதை நிறைவேற்ற முடியவில்லை.
தமிழகம் :
தில்லுமுல்லுக்கு இடமின்றி ஆசிரியர் கவுன்சிலிங்:போராட்டம் இல்லாததால் அதிகாரிகள் நிம்மதி
சிபாரிசுக்கு இடமின்றி, காலியிடங்களை மறைக்காமல் ஆசிரியர் கவுன்சிலிங் நடந்து வருகிறது. போராட்டம், ஆர்ப்பாட்டம் இல்லாததால், அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், ஆக., 3ல் துவங்கி நடந்து வருகிறது. தொடக்கக் கல்வித்துறைக்கு தனியாகவும், உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான பள்ளிக் கல்வித்துறைக்கு தனியாகவும் நடந்து வருகிறது. இந்த ஆண்டு, 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தில்லுமுல்லு, சிபாரிசு கடிதமின்றி கவுன்சிலிங் நடத்துவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
39 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி, முதல்வர் பதக்கம்
சென்னை:சுதந்திர தினத்தை முன்னிட்டு, போலீஸ் அதிகாரிகள், 39 பேருக்கு ஜனாதிபதி மற்றும் முதல்வர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விளையாட்டு :
நூலிழையில் வெண்கலம் இழந்தார் இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை திபா கர்மாகர்
ஜிம்னாசியம் மகளிர் பிரிவில் திபா கர்மாகர் அற்புதமாக தனது திறமையை வெளிப்படுத்தி நூலிழையில் வெண்கலத்தை தவற விட்டார். மொத்தமாக இவர் 15.066 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் முடிந்தார்.
ஆனாலும் ஜிம்னாஸ்டிக்ஸில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு இந்திய வீராங்கனை சாதனை நிகழ்த்தியது ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு நிகழ்வாகும்.
முதல் வால்ட்டில் 14.886 எடுத்த தீபா கர்மகர், இறுதியில் 15.066 எடுத்து 4-வதாக முடிந்தார், 3-வது இடம்பிடித்த சுவிஸ் வீராங்கனை கியுலியா ஸ்டெய்ன்குரூபரைக் காட்டிலும் 0.15 புள்ளிகளே தீபா குறைவாக பெற்றார்.
100மீ ஓட்டம்: 3-வது முறையாக தங்கம் வென்று உசைன் போல்ட் சாதனை
ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் ரசிகர்கள் பரபரப்பாக எதிர்பார்த்த 100மீ ஓட்டத்தில் ஜமைக்காவின் உலக சாம்பியன் உசைன் போல்ட் 3-வது முறையாகத் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
2008 பெய்ஜிங் மற்றும் 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் நிகழ்த்தியதை அடுத்து 3-வது முறையாக தற்போது ரியோவிலும் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தார்.
உசைன் போல்ட் 9.81 விநாடிகளில் இலக்கைக் கடந்தார். அமெரிக்க வீரர் காட்லின் ஒரு நேரத்தில் முன்னிலையில் இருந்தார். கடைசியில் உசைன் போல்ட் வழக்கம் போல் ஒரு அழுத்து அழுத்த காட்லின் 0.08 விநாடிகள் பின் தங்கி 2-வது இடம் பிடித்தார். அதாவது 9.89 விநாடிகளில் இவர் இலக்கை கடந்தார்.
வணிகம் :
வளர்ச்சிக்கு வழிவகுக்கும் இனயம் துறைமுகம்
பல ஆண்டுகளாக குளச்சல் துறைமுகத் திட்டம் பேசப்பட்டு வந்த நிலையில், இப்போது குளச்சல் அருகே உள்ள இனயத்தில் வர்த்தகத் துறைமுகம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே இனயத்தில் ரூ. 27 ஆயிரத்து 570 கோடியில் அமையும் இந்த வர்த்தகத் துறைமுகம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் என்று தொழில் துறையினர் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
சரக்குப் பெட்டகங்களுடன் வரும் பெரிய கப்பல்களைக் கையாளக் கூடிய பெரிய துறைமுகங்கள் இந்தியாவில் இல்லாத சூழலில், இனயம் வர்த்தகத் துறைமுகம் ஏற்றுமதி - இறக்குமதியை பெருமளவு உயர்த்துவதற்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ஹிண்டால்கோ லாபம் 4-மடங்கு உயர்வு
 அலுமினியம் மற்றும் தாமிரம் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஹிண்டால்கோ நிறுவனத்தின் முதல் காலாண்டு லாபம் நான்கு மடங்கு அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சதீஷ் பை தெரிவித்ததாவது:
நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ஹிண்டால்கோ நிறுவனத்தின் வருவாய் ரூ.7,716.53 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாயான ரூ.8,667 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 11 சதவீதம் குறைவாகும்.
இதேபோன்று நிறுவனத்தின் மொத்த செலவினமும் ரூ.7,993.05 கோடியிலிருந்து சரிவடைந்து ரூ.6,703.82 கோடியாக காணப்பட்டது. நிகர லாபம் நான்கு மடங்கு அதிகரித்து ரூ.294 கோடியாக காணப்பட்டது.


No comments: